கூடைப்பந்தாட்டத்திற்கு மிகவும் பிரபல்யம் வாய்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தில்பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் இம்முறையும் அருட்தந்தை ஹேர்பேர்ட் அவர்களின் நினைவையொட்டி வருடாவருடம் நடைபெறும் கூடைப்பந்தாட்டத் தொடர் ஆறாவதுதடவையாக மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் (கொழும்பு கிளை) ஏற்பாட்டில் நேற்று (28) ஆரம்பமாகியிருந்தது. 

எட்டு அணிகளின் பங்குபற்றுதலுடன்  இம்மாதம் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த தொடரின் ஆரம்ப நாளில் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

முத்துவல் விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

Mutwal SC v SL Police

B குழுவைச் சேர்ந்த இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியானது தொடரின் முதல் போட்டி என்ற காரணத்தினால் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருந்தது.

போட்டியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே பொலிஸ் அணியினர் துரித கதியில் செயற்பட்டு புள்ளிகளைச் சேர்க்கத் தொடங்கினர். எனினும், சளைக்காத முத்துவல் அணியினர் பின்னைய நிமிடங்களில் சிறப்பாக செயற்பட்டிருந்த காரணத்தினால் முதற் கால்பகுதியில் பொலிஸ் அணியினால் 17:14 என்ற புள்ளிகள் கணக்கிலேயே முன்னிலை அடைய முடிந்தது.

முதல் அரைப்பகுதி நிறைவடைய முன்னர்  இரு அணிகளாலும் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தப்பட்டிருப்பினும், தொடர்ந்தும் பொலிஸ் அணி வீரர்கள் சிறப்பான பந்து பரிமாற்றம் மற்றும் பந்தினை கையாண்ட விதம் என்பவற்றின் காரணமாக 30:26 என்ற புள்ளிகளால் முன்னிலையினை தொடர்ந்தனர்.

மூன்றாவது கால்பகுதி முழுமையாக பொலிஸ் அணியின் பக்கம் மாறிய காரணத்தினால், அவ்வணியினர் இப்பாதியில் 20 புள்ளிகள் வரை பெற்று 50:38 என தமது முன்னிலையைத் தொடர்ந்தனர்.

இறுதி கால்பகுதியில் பொலிஸ் அணி மேலும் சிறப்பாக செயற்பட்டிருப்பினும், அதிகளவிலான ப்ரீ த்ரோக்களை (free throws) பெற்றிருந்த முத்துவல் கழகம் பொலிஸ் கழகம் போல் 19 புள்ளிகளை சேர்த்திருந்தது. எனினும், முன்னைய கால்பகுதிகளில் சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால் பொலிஸ் அணி 69:57 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை சுவீகரித்தது.


யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட கழகம் எதிர் மட்டக்களப்பு (சிவப்பு அணியினர்)

Jaffna v Batticaloa Redஅரங்கு முழுதும் ரசிகர்கள் நிறைந்த நிலையில் தொடங்கியிருந்த குழு A இற்கான இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியிருந்த வடமாகாண அணி 19:7 என முதற் கால்பகுதியில் முன்னேறியது.

இரண்டாம் கால்பகுதியில் ஆரம்ப நிமிடங்களில் மட்டக்களப்பு சிவப்பு அணியினர் புள்ளிகளை சேர்த்திருப்பினும் யாழ்ப்பாண அணியினர் நெருக்கடி தந்து முதல் அரைப்பகுதி நிறைவடையும் போது, 31:15 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து முன்னேறியிருந்தனர்.

மூன்றாம் கால்பகுதியில் புள்ளிகள் சேர்ப்பதில் சிறிய தடுமாற்றத்தினை மட்டக்களப்பு சிவப்பு அணியினர் காட்டியிருந்தனர். இதனால், மூன்றாம் கால்பகுதியிலும் 41:24  என யாழ்ப்பாண அணியினர் முன்னிலை பெற்றனர்.

நான்காம் கால்பகுதியில் நுணுக்கமான முறையிலும் தந்திரோபாயங்களை கையாண்டும் எதிரணியின் எல்லைக்குள் பந்து பரிமாற்றங்களினை மேற்கொண்டு அபாரமாக ஆடிய யாழ்ப்பாண அணியினர் 21 புள்ளிகள் வரையில் சேர்த்து 62:36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தமதாக்கினர்.


இலங்கை விமானப்படை எதிர் மட்டக்களப்பு (நீல அணியினர்)

Air force v Batti Blues

இந்த வருடத்திற்கான சிரேஷ்ட அணிகளுக்குரிய தேசியமட்டப் போட்டிகளில் சம்பியனாக மகுடம் சூடியிருந்த விமானப்படை அணியானது மட்டக்களப்பு நீல அணியினரை எதிர்த்தாடியிருந்த குழு B இற்கான இந்தப்போட்டியில், மீன்பாடும் தேனாட்டின் அணியினர் பலமிக்க விமானப்படை அணிக்கு முதல் கால்பகுதியில் சவாலாக காணப்பட்டிருந்ததை நோக்க முடிந்தது.

எனினும், தொடர்ந்து விமானப்படை அணியினர் விரைவாகவும் சாமர்த்தியமாகவும் செயற்பட்டு புள்ளிகளை சேர்த்திருந்தனர். இதனால், முதல் கால்பகுதி 21:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் விமானப்படைக்கு சாதகமாகவே நிறைவுற்றிருந்தது.

போட்டியின் முதலாம் அரைப்பகுதி நிறைவடைவதற்கு முன்னர், ஒரு தடுப்பு அரண் அமைத்தாற் போல் செயற்பட்ட விமானப்படை அணியினர் மட்டக்களப்பு நீல அணியினரை இப்பாதியில் இரண்டு புள்ளிகளை மாத்திரமே பெறவைக்கும் அளவிற்கு அதி சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.

போட்டியின் முதற் கால்பகுதியில் காட்டியிருந்த ஆக்ரோஷமான ஆட்டம் இம்முறை மட்டக்களப்பு அணியினால் வெளிக்காட்டப்படவில்லை. இதனால், விமானப்படை அணியின் முன்னிலையோடு 14:36 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் அரைப்பகுதி முடிவடைந்திருந்தது.

மூன்றாம், நான்காம் கால் பகுதிகளில் தேவைகளுக்கு ஏற்றது போன்று விரைவான வீரர்களின் பரிமாற்றத்துடன் புள்ளிகளை விரைவாக மீண்டும் சேர்க்கத் தொடங்கியிருந்த விமானப்படை அணியானது, இறுதியில் 23:50 என்ற புள்ளிகள் கணக்கில் தமது பலத்தினை நிரூபித்துக்காட்டி இத்தொடரில் ஏனைய அணிகளுக்கும் சவாலாய் இருக்கப்போவதையும் காண்பித்து, ஹேர்பேர்ட் கிண்ணத்துக்கான தமது முதல் போட்டியில் வெற்றியை தமதாக்கிக்கொண்டனர்.