இலங்கையின் பெரிய கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்

157

இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமாகம தியகமவில் நிர்மாணம் செய்யப்படவிருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கின்றார். 

வைத்திய கட்டில்களை அன்பளிப்புச் செய்த நுவான் குலசேகர

கிட்டத்தட்ட 40,000 பார்வையாளர்கள் வரை இருந்து கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாகவும் அமைக்கப்படவிருக்கின்றது.   

அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் ஹோமாகமவில் இந்த மைதானம் நிர்மாணிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 26 ஏக்கர் காணியினை இன்று (17) பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

இந்த மைதானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஷம்மி சில்வா, “கொழும்பு மாவட்டத்தில் ஆர். பிரேமதாச மைதானத்திற்குப் பின்னர் பகலிரவு போட்டிகளை நடாத்தும் வசதிகள் கொண்ட இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.  

அதேநேரம், இந்த மைதானத்தினை பூர்த்தி செய்ய 30 தொடக்கம் 40 மில்லியன் டொலர்கள் வரையில் செலவாகும் எனவும் ஷம்மி சில்வா குறிப்பிட்டிருக்கின்றார். 

”இந்த மைதானத்தினை பூர்த்தி செய்ய 30 தொடக்கம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் செலவாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.”  

இதேவேளை, இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

எனினும், இந்த புதிய மைதானம் நிர்மாணிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன

அதில் அவர், ”ஏற்கனவே இம்மிடம் உள்ள மைதானங்களில் சர்வதேசப் போட்டிகளோ, உள்ளூர் முதல்தரப் போட்டிகளோ  அவ்வளவு இடம்பெறுவதில்லை. இவ்வாறான ஒரு நிலையில் இன்னும் ஒரு மைதானம் தேவையா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.   

ஏற்கனவே, இதற்கு முன்னரும் யாழ்ப்பாணம், பொலன்னறுவை மற்றும் பாதுக்க ஆகிய இடங்களில் புதிய கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்படவுள்ளதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவற்றின் எந்த வேலைகளும் இதுவரை நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<