“நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றங்கள் இடம்பெறுமா?” – சில்வர்வூட்

ICC T20 World Cup 2022

2793

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்தப்போட்டியில் மாற்றங்கள் இடம்பெறுமா? அல்லது இடம்பெறாதா? என்பது தொடர்பில் இப்போது குறிப்பிட முடியாது என இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் தோல்வி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றி

அதேநேரம் இலங்கை அணி போட்டித்தன்மையான குழுவில் இடம்பெற்றுள்ளபோதும் அணியின் இலக்கு போட்டிகளில் வெற்றிபெறுவதே தவிர்த்து, எதிரணிகளுக்கு சவால் கொடுப்பது அல்ல என இவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அணி ஒவ்வொரு போட்டிகளிலும் உபாதை காரணமாக தடுமாறிவருகின்றது. முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுசங்க ஆகியோரை இழந்த பின்னர், தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது பினுர பெர்னாண்டோ உபாதைக்கு முகங்கொடுத்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இவர்,  “T20 உலகக்கிண்ணத்தில் எந்தவொரு உபாதையாக இருந்தாலும் அது கடினம். வீரர்கள் எப்படி இருக்கின்றனர் என கணக்கிடவேண்டும். உபாதை தொடர்பில் இப்போது பதில் கூறுவது கடினம். உடற்கூறு நிபுணர் அறிக்கையொன்றை தருவார். அதன் பின்னர் நாம் திட்டங்களை வகுக்கமுடியும்” என்றார்.

எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய தகவல்களின் அடிப்படையில், பினுர பெர்னாண்டோ T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியுள்ளார் என்ற தகவல்கள் இன்றைய தினம் (26) வெளியாகியுள்ளது.

இதேவேளை மிகவும் போட்டித்தனை்மையான குழுவில் இடம்பெற்றுள்ளதால், அணியின் இலக்கு எதிரணிகளுக்கு சவால் கொடுப்பது மாத்திரமா? என்ற கேள்விக்கும் இவர் பதிலளித்துள்ளார்.

“நாம் எதிரணிகளுக்கு சவால் கொடுக்க மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. வெற்றிபெறவும் எதிர்பார்க்கிறோம். எமக்கான தரநிலையை உணர்ந்துள்ளோம். வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எம்முடைய திறமைக்கு ஏற்ப நாம் விளையாடினால், எந்த போட்டியிலும் இறுதிவரை செல்லமுடியும். இதனை நாம் ஆசியக்கிண்ணத்தில் காட்டியிருந்தோம். அணி வீரர்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. எனவே, நாம் அடுத்த போட்டி தொடர்பில் சிந்தித்து அதற்காக தயாராக வேண்டும்” என்றார்.

இதேவேளை இலங்கை அணியானது தங்களுடைய அடுத்தப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த இந்தப்போட்டி சிட்னியில் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<