2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பற்றிய பேச்சுக்கள் மெதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குறைந்து வரும் இத்தருணத்தில், யாரும் எதிர்பார்த்து இருக்காத, ஒரு நாள் தரவரிசையில் பின்நிலையில் இருந்த அணியொன்று, 2.2 மில்லியன் டொலர்கள் பணப்பரிசுடன் இத்தொடரினை (சம்பியன்ஸ் கிண்ணத்தினை வென்று) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

பாகிஸ்தானியர்களாக மாறிய இலங்கையர்கள்

இலங்கை அணியின் சாதாரண ரசிகர்கள், தீவிர ரசிகர்கள் மற்றும் இந்திய அணியின் ரசிகர் அல்லாதவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியானது சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வீழ்த்தியிருந்ததன் மூலம் கிடைத்த மகிழ்ச்சியினை கொண்டாட ஒன்று கூடியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியானது ஐ.சி.சி இன் மூன்று வகையான கிண்ணங்களையும் வென்ற (உலகக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம்) உலகின் நான்காவது நாடாக மாறியிருந்தது.

இலங்கை அணியின் அனைத்து ரசிகர்களும் பாகிஸ்தான் அணியின் வெற்றியினை, சமூக வலைத்தளங்களில், “PAKISTAN ZINDABAD” மற்றும் “WELL DONE PAKISTAN” போன்ற சுலோகங்களை பதிந்து கொண்டாடியிருந்தனர். இது பாகிஸ்தானிற்கு அடுத்ததாக, அவ்வெற்றியின் மூலம் 20 மில்லியனிற்கு மேலான மக்கள் தொகையினைக் கொண்ட இலங்கை மகிழ்வுற்றதனை வெளிப்படுத்துகின்றது.

சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டிகளிற்கு, இம்முறை ஒரேயொரு ஆசிய அணியாக இலங்கை அணியானது தெரிவாகாது இருந்தமை சில இலங்கை ரசிகர்களிற்கு கவலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அவர்கள் அனைவரும் தங்களது உள்ளங்களில் ஒரு மூலையில் பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்து அணியையும், இந்திய அணியையும் வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். இதனால், கடந்த ஓரிரு நாட்களில் இலங்கை ரசிகர்கள் பாகிஸ்தானியர்களாக மாறியிருந்ததை  யாராலும் மறுக்க முடியாது. இல்லையா?  

தேவையான நேரத்தில் உதவும் நண்பனாக இலங்கை இருக்குமா?

2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் சென்றிருந்த பஸ்ஸின் மீது பாகிஸ்தானில் வைத்து கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அச்சம்பவத்தினை அடுத்து அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடும் பிரதான அணிகள் எதுவும் இதுவரை சுற்றுப் பயணங்கள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இது இவ்வாறிருக்க இந்த சம்பவத்தை காரணம் காட்டி பாகிஸ்தானை இலங்கையர்கள் எவரும் வெறுக்கவில்லை. பாகிஸ்தானுடன் இலங்கையின் நேசத்தினை முக்கியமாக இந்தியா அணியுடன் பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளின் போது எம்மால் அவதானிக்க முடியும்.

அதே போன்று, இந்த நட்புறவினை நீடிக்க இரண்டு அணிகளும் கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்காமல் பாகிஸ்தான் செல்லலாம் அல்லவா? பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்படும் பட்சத்தில், நிச்சயமாக பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இதே போன்றதொரு கருத்தினை பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட், தமது வெற்றியின் பின்னர் தெரிவித்திருந்தார்.

“இந்த வெற்றியை அனைவரும், இன்று மற்றும் நாளை மட்டுமல்ல நீண்ட காலத்திற்கு ஞாபகம் வைத்திருப்பர். இது நிச்சயமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு உற்சாகமூட்டும் விடயங்களில் ஒன்று என்பதிலும் ஐயமில்லை. நான் அனைத்து நாடுகளையும் வாழ்த்துவதோடு, பாகிஸ்தானில் விளையாட அழைப்பும் விடுக்கின்றேன்“ என்றார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒன்றாக இணைந்து இவ்வருட செப்டம்பர் மாதத்தில, சர்வதேச கிரிக்கெட்டினை மீண்டும் பாகிஸ்தானில் கொண்டு வர உலக பதினொருவர் (World XI) அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை லாஹூரில் நடாத்த திட்டமிட்டுள்ளது. இத்தொடர் வெற்றியாகும் பட்சத்தில், இவ்வருட இறுதிப்பகுதியில் இலங்கை அணியானது தனது நண்பனிற்கு உதவும் விதமாக, தமது முழுத் தொடரையும் விளையாட ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லாமல் பாகிஸ்தானிற்கு செல்லுமா?

எதிர்வுகூற முடியா திருப்பு முனை எழுச்சிகளின் அரசனாக காணப்படும் பாகிஸ்தான்

பல காரணங்களிற்காக, பாகிஸ்தான் யாராலும் (கிரிக்கெட்டில்) எதிர்வு கூறமுடியாத அணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு கடந்த கால வரலாறுகளில் அவர்கள் திடீர் எழுச்சிகள் மூலம் பெற்றுக்கொண்ட சிறப்பு வெற்றிகள் சான்றாக இருக்கின்றன. இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும், அவர்கள் பர்மிங்ஹம் நகரில் நடைபெற்ற இந்திய அணியுடனான முதல் போட்டியில் படுதோல்வியடைந்து, எஞ்சிய போட்டிகளில் மீண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மழை வந்த காரணத்தினாலேயே, தென்னாபிரிக்க அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருப்பினும், அவர்கள் இத்தொடரில் உறுதியாக சாதிக்க கூடிய எதிர்வு கூற முடியாத அணி என்பதனை கார்டிப் மைதானத்தில் இலங்கை அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட வெற்றி ஊர்ஜிதம் செய்திருந்தது.

பல வருடங்களாக எதனையும் எதிர்வு கூறமுடியாத அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வருகின்றது. ஏனெனில் அவர்களினால் ஒரு நாளைக்கு உலகின் அதி சிறந்த அணி போல் ஆட்டம் வெளிப்படுத்தப்படும், மறுநாளில் உலகின் மிக மோசமான அணிபோன்று ஆட்டம் வெளிப்படுத்தப்படும். பாகிஸ்தான் சம்பியன்ஸ் கிண்ணத்திலும் இவ்வாறே செயற்பட்டிருந்தது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்திய அணியுடன் பெற்றிருந்த தோல்வியின் காரணமாக யாராலும் எதிர்பார்க்கப்பட்டு இருந்திராத பாகிஸ்தான் அணியானது, அதன் பின்னர் பீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுந்து சாதனை புரிந்திருந்தது.

முழுப் பலத்தோடு விளையாடு அல்லது தொடரிலிருந்து வெளியேறு

பாகிஸ்தான் அணியானது, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சாதனை புரிய எதிரணியின் பலவீனங்களை அறிந்து வியூகங்களுடன் கூடிய திட்டம் ஒன்றினை அமைத்து, தமது முழுப் பலத்தினையும் பிரயோகித்திருந்தது. அவ்வாறான சில திட்டங்களை நாம் கீழே பார்க்க முடியும்.

  • இலங்கை அணியுடனான போட்டியில் சற்று மோசமான ஆட்டத்தினை காட்டியிருந்த வேகப்பந்து வீச்சாளர் பாஹிம் அஷ்ரப் இற்கு பதிலாக, இங்கிலாந்து அணியுடனான அரை இறுதிப் போட்டியில் அனுபவம் குறைந்த சுழல் பந்து வீச்சாளர் சதாப் கானிற்கு எந்தப் பயமுமின்றி வாய்ப்பு வழங்கியிருந்தமை.
  • இத்தொடரிற்கு முன்னதாக, அணியின் முக்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடாத (Form) காரணத்தினால் அணியில் இணைக்காது விட்டிருந்தமை. இதற்கு உதாரணமாக உமர் அக்மலிற்கு  அணியில் வாய்ப்பு கிடைக்காது விட்டதை குறிப்பிடலாம்.
  • தமது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஹமட் ஷெசாத்திற்கு பதிலாக துணிச்சல் மிக்க பக்கார் சமானிற்கு வாய்ப்பு தந்தமை.
  • போட்டியின் மத்திய ஓவர்களில், ஹசன் அலியின் பந்து வீச்சு மூலம் எதிரணி வீரர்களை துவம்சம் செய்திருந்தமை.

பாகிஸ்தான் அணி சிறப்பான வெற்றியொன்றினைப் பெற்றுக்கொண்டிருப்பினும், இந்து சமுத்திரத்தில் அவர்களின் சகோதர்களில் ஒருவரான இலங்கை அணி, இத்தொடரிற்கு முன்னதாக அணியின் பந்து வீச்சிற்கு பலம் சேர்க்க கூடிய முக்கிய வீரர்களில் ஒருவர் என அனைரவாலும் பேசப்பட்டிருந்த விஷேட வகை சுழற்பந்து வீச்சாளர் லக்‌ஷான் சந்தகனிற்கு வாய்ப்பு அளிக்காது விட்டமை வருத்தம் தருகின்றது.

இவரிற்கு வாய்ப்பு கொடுக்காதது ஒரு புறமிருக்க, இத்தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்த போட்டிகளில் திருப்பு முனையாக அமைந்து போட்டியின் போக்கினை முழுமையாக மாற்றியது தினேஷ் சந்திமாலின் ஆட்டமிழப்பும் திசர பெரேரா பிடியெடுப்பை தவறவிட்டதுமாகும்.  

பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரையில் அவர்களது நேரான மனப்பாங்கும், இக்கட்டான தருணங்களில் காட்டிய போராட்டம் கலந்த ஆட்டமும் இலங்கை அணியிடம் குறைவாக காணப்பட்டிருந்தது. எனினும், கப்புகெதரவின் காயத்தின் பின்னர் அணியில் தனுஷ்க குணத்திலக்க இணைக்கப்பட்டதும், நான்காம் இலக்கத்தில் குசல் பெரேரா துடுப்பாடியதும், இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை வெளிப்படுத்தியிருந்த சில சிறப்பான நகர்வுகளிற்கு உதாரணமாகக் கூறமுடியும்.

தென்னாபிரிக்க அணியுடன் இலங்கை படுதோல்வி அடைந்திருப்பினும், இந்திய அணியுடன் மிகவும் மகிழ்ச்சிகரமான வெற்றியினைப் பெற்றிருந்தது. எனினும், அண்மைய சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் வெற்றியாளர்களுடன் எதிர்பாராத தோல்வியினை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணியானது இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத்தில் என்னென்ன முக்கிய விடயங்களினை செய்திருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.  

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த பந்து வீச்சு இயந்திரங்கள்

பாகிஸ்தான் அணியானது, இத்தொடர் மூலம் தாம் பல சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கி இருந்ததை காட்டியிருந்தது. ஹசன் அலி, மொஹமட் அமீர், ஜூனைத் கான் மற்றும் ரும்மான் ராயிஸ் ஆகியோர் அணியின் வெற்றிக்காக சிறப்பாக பந்து வீசியிருந்தனர்.

இலங்கை அணியினைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போது, லசித் மாலிங்க, சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் நல்லதொரு பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த போதும் களத்தடுப்பாளர்கள் ஒத்துழைக்காமல் போயிருந்த காரணத்தினால் அவர்களது பந்து வீச்சு வீணடிக்கப்பட்டிருந்தது.

இத்தொடரில், இலங்கை விளையாடியிருந்த மூன்று போட்டிகளிலும் நுவன் பிரதீபினால் சிறப்பானதொரு பந்து  வீச்சு வெளிக்காட்டப்பட்டிருந்தது. இலங்கை அணி இனிவரும் வருடங்களில் அவரை சரிவர உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மூன்று வீரர்களுடன் ஒப்பிடும் போது, லக்மாலின் ஆட்டம் சற்று குறைவே. எனினும் இத்தொடரில் அவரது பங்களிப்பினையும் மறக்க முடியாது. இன்னும் மாலிங்கவின் ஆட்டத்தினைப் பற்றி யாருக்கும் கூறத்தேவையில்லை. எனவே, 2019 உலகக் கிண்ணம் வரை அவர் போதிய உடல் தகுதியுடன் அணியில் இடம்பெற பிரார்த்திப்போம்.

அத்தோடு, பாகிஸ்தான் அணியானது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போட்டிகளில் மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை சாரமாரியாக வேட்டையாடியதில் இருந்து இலங்கை அணியானது பாடம் கற்கவேண்டும். அவர்கள் விளையாடியிருந்த நான்கு போட்டிகளிலும் 11ஆவது ஓவரிலிருந்து 40 ஓவர்கள் வரையில் 23 விக்கெட்டுகள் சரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டியாக நோக்கும் போது இது ஒரு போட்டிக்கு குறிப்பிட்ட அந்த ஓவர்கள் இடைவெளியில் அவர்களால் சராசரியாக 6 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டதனைக் காட்டுகின்றது.

எனினும், இலங்கை அணியானது தாம் விளையாடியிருந்த மூன்று போட்டிகளிலும் மொத்தமாக 19 விக்கெட்டுகளை மாத்திரமே எடுத்திருந்தனர். இலங்கை அணியினர் குறைவாக விக்கெட்டுகளை எடுத்திருப்பது பாகிஸ்தான் அணியால் செய்ய முடிந்த ஒரு விடயத்தை இலங்கை வீரர்களால் மூன்று போட்டிகளிலும் செய்ய முடியாமல் போயிருந்ததை காட்டி நிற்கின்றது.

இறுதியாக

பாகிஸ்தான் அணியானது இந்தியாவை தோற்கடித்து சம்பியன்ஸ் கிண்ணத்துடன் நாடு செல்லும் இவ்வேளையில், இலங்கை அணியானது இந்தியாவிற்கு எதிராக சவாலான இலக்கினை விரட்டி பெற்றுக்கொண்ட வெற்றியுடன் திருப்தியடைகின்றது. எனவே, இரு அணிகளும் இந்தியாவை வீழ்த்துவதில் அடையும் மகிழ்ச்சி மூலம் ஒற்றுமை அடைகின்றன. இவ் ஒற்றுமையே இரண்டு அணிகளும் ஒன்றையொன்று விடாமல் நேசிக்க காரணமாக அமைகின்றது.