கொழும்பு புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வார்டன் செல்வரத்தினம் நினைவு கிண்ணப் போட்டியில் கொழும்பு புனித தோமியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. இதன் போது முதல் இன்னிங்சில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித்தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். சிறப்பாக துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணி 80.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 406 ஓட்டங்களைப் பெற்று தமது முதல் இன்னிங்சை நிறுத்தி, புனித ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு துடுப்பாடுமாறு பணித்தது.

சிறப்பாகத் துடுப்பாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான, ரவிந்து கொடிதுவக்கு மற்றும் டுலித் குணரத்ன தமக்கிடையே 156 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர். 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ரவிந்து கொடிதுவக்கு துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார்.

அதனைத் தொடர்ந்தும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தினை தொடர்ந்த டுலித் குணரத்ன 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 225 பந்துகளில் 143 ஓட்டங்களை குவித்தார். அத்துடன் மூன்றாவது விக்கெட்டுக்காக மந்தில விஜேரத்னவுடனும் 135 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டார்.

இவர்களைத் தொடர்ந்து மந்தில விஜேரத்னவும் சிறப்பாகத் துடுப்பாடி 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 114 பந்துகளில் 103 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர், தமது துடுப்பாட்டத்தை நிறுத்தி புனித ஜோன்ஸ் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தார்.  

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய புனித ஜோன்ஸ் கல்லூரி, நேற்றைய ஆட்ட நேரம் (திங்கட்கிழமை) நிறைவுற்றபோது எவ்விதமான விக்கெட் இழப்பும் இன்றி 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இன்றைய நாள் தொடர்ந்து ஆட்டத்தை ஆரம்பித்த புனித ஜோன்ஸ் கல்லூரி அணி 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித தோமியர் கல்லூரி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய இடதுகை சுழல்பந்து வீச்சாளர் பவித் ரத்நாயக்க 47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புனித ஜோன்ஸ் கல்லூரி சார்பாக கூடிய ஓட்டங்களாக 82 ஓட்டங்களை ஜே. கிரிஷாந்துஜன் பதிவு செய்தார்.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த புனித தோமியர் கல்லூரி, மீண்டும் புனித ஜோன்ஸ் கல்லூரி அணியை இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடுமாறு பணித்தது. மிகவும் கடினமான பந்து வீச்சை எதிர்கொண்ட புனித ஜோன்ஸ் கல்லூரி அணி 43 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 1௦௦ ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக சிறப்பாக துடுப்பாடிய ஜே. கிரிஷாந்துஜன் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

புனித தோமியர் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரொமேஷ் நல்லப்பெரும மற்றும் பவித் ரத்நாயக்க தலா 3 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

தனிப்பட்ட விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – மந்தில விஜேரத்ன (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த பந்து வீச்சாளர் – பவித் ரத்நாயக்க (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த களத் தடுப்பாளர் – வி. ஜதுஷன் (புனித ஜோன்ஸ் கல்லூரி)
  • ஆட்ட நாயகன் – டுலித் குணரத்ன (புனித தோமியர் கல்லூரி)

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்) – 406/3d (80.2) – ரவிந்து கொடிதுவக்கு 92, டுலித் குணரத்ன 143, மந்தில விஜேரத்ன 103*, கா கபில்ராஜ் 2/107

புனித ஜோன்ஸ் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்) – 174 (67.2) – ஜே. கிரிஷாந்துஜன் 82, வி. ஜதுஷன் 46, பவித் ரத்நாயக்க 6/47, கிஷான் முனசிங்க 1/28

புனித ஜோன்ஸ் கல்லூரி(இரண்டாம் இன்னிங்ஸ்) – 100/7 (43) – ஜே. கிரிஷாந்துஜன் 36, ரொமேஷ் நல்லப்பெரும 3/19, பாவித் ரத்நாயக்க 3/19