ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கையிலிருந்து 17 பேர்

19th Asian Junior Athletic Championship 2024

71

21ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி இன்று (22) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது.

ஆசிய மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணியில் 17 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

11 பேர் கொண்ட ஆண்கள் அணிக்கு கொழும்பு ஆனந்த கல்லூரியின் மெரோன் விஜேசிங்க தலைவராகவும், பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் தலைமையிலான மகளிர் அணியில் 6 வீராங்கனைகள் உள்ளனர்.

இறுதியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 7ஆவது இடத்தைப் பிடித்தது.

இலங்கை நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனை தருஷி கருணாரத்ன தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 400 மீற்றர் கலப்பு அஞ்லோட்ட அணி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இதில் ஜயெஷி உத்தரா மற்றும் மலித் யசிரு ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

40 இற்கும் மேற்பட்ட பங்குபற்றவுள்ள இந்த ஆண்டு ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி 5 இற்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இம்முறை ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பத்ரா குணவர்தனவும், நிபுன நிர்மல் பயிற்சியாளராவும், அணியின் முகாமையாளராக இந்திக பிரசன்ன மற்றும் வீரர்களுக்குப் பொறுப்பான அதிகாரியாக நதீபா திலகரத்னவும் செயல்படவுள்ளனர்.

ஆண்கள் அணி விபரம் –

மெரோன் விஜேசிங்க (100 மீற்றர், 100×4 அஞ்சலோட்டம்), அயோமால் அகலங்க (400 மீற்றர், 400×4 அஞ்சலோட்டம்), தருஷ மெண்டிஸ் (உயரம் பாய்தல்), தெனெத் அனுஹஸ் (உயரம் பாய்தல்), தினேத் வீரரத்ன (100×4 அஞ்சலோட்டம்), மலித் கே. தமேல் (100×4 அஞ்சலோட்டம்), ஆர்.ஐ விதுஷன் (100×4 அஞ்சலோட்டம்), ஜாத்ய கிருள (400×4 அஞ்சலோட்டம்), அவிஷ்க ராஜபக்ஷ (400×4 அஞ்சலோட்டம்), ஹசிந்து நெத்சரா (400×4 அஞ்சலோட்டம்), ஷஷிந்த சில்வா (400×4 அஞ்சலோட்டம்).

பெண்கள் அணி விபரம் – மதுஷானி ஹேரத் (நீளம் பாய்தல், முப்பாய்ச்சல்), தருஷி அபிஷேகா (800 மீற்றர், 400×4 அஞ்சலோட்டம்), நுஹன்சா கொடித்துவக்கு (400×4 அஞ்சலோட்டம்), ஜித்மா விஜேதுங்க (400×4 அஞ்சலோட்டம்), மஹிமா பிரவிந்தி (400×4 அஞ்சலோட்டம்), சாருணி பிரமுதிகா (400×4 அஞ்சலோட்டம்).

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<