இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

91

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் 16 பேர் கொண்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாம் சற்று முன்னர் (9) இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைபெற்றுவருகின்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடராக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து குழாம் கடந்த மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. 

இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் மோதவுள்ள……………….

அதன் பிரகாரம் குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த வியாழக்கிழமை (3) இலங்கை வந்தடைந்து தற்போது இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

அதன் அடிப்படையில் தற்போது குறித்த தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின்படி இலங்கை டெஸ்ட் அணியை தொடர்ந்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன வழிநடத்தவுள்ளார். இலங்கை அணி இறுதியாக டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (டெஸ்ட் சம்பியன்ஷிப் அந்தஸ்து அற்ற) விளையாடியிருந்தது.  

குறித்த ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாத்திலிருந்து தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஒரேயொரு மாற்றம் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்காக மூவகையான போட்டிகளிலும் விளையாடிவரும் ஆரம்ப, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்தான் குசல் ஜனித் பெரேரா. இவர் ஒரு சில காரணங்களினால் தேர்வாளர்களினால் ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். 

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி சமநிலையில் நிறைவு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும்………….

இந்நிலையில் தற்போது மீண்டும் இலங்கை டெஸ்ட் குழாமில் குசல் பெரேரா இடம்பெற்றுள்ளார். இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குசல் பெரேரா 2 சதங்கள் மற்றும் 4 அரைச்சதங்களுடன் 934 ஓட்டங்களை குவித்துள்ளார். இந்நிலையில் குசல் பெரேரா குழாமில் இடம்பெற்றிருந்தாலும், இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டி20 சர்வதேச போட்டியின் போது அவர் உபாதைக்குள்ளாகி மைதானத்திலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக குசல் பெரேரா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு குசல் பெரேராவின் மீள்வருகை காரணமாக ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெற்றும் போட்டியில் விளையாடாத துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி டி20 சர்வதேச போட்டியின் போது உபாதைக்குள்ளாகி பந்துவீச முடியாத நிலைக்கு உள்ளான வனிந்து ஹஸரங்க முதல் முறையாக டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் உள்வாங்கப்பட்டிருந்தார். 

ஆனால் குறித்த உபாதையின் பின்னர் கிடைக்கப்பெற்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி வனிந்து ஹஸரங்க சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வனிந்து ஹஸரங்க குறித்த இங்கிலாந்து தொடருக்கான குழாமிலிருந்து வெளியேறுகிறார். இவருக்கான பதில் வீரர் அறிவிக்கப்படாத நிலையில் முதல் போட்டிக்கு முன்னராக அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஐந்து தடவைகள் டி20 உலகக்கிண்ண சம்பியனான அவுஸ்திரேலிய மகளிர்

இந்திய மகளிர் அணியுடன் இன்று…………………

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் போது உபாதைக்குள்ளாகி அடுத்து நடைபெற்ற டி20 சர்வதேச தொடருக்கான குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த துடுப்பாட்ட சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா உபாதையிலிருந்து மீண்டு டெஸ்ட் குழாமிற்கு திரும்பியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் அறிமுகம் பெற்று இதுவரையில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1 சதம், 5 அரைச்சதங்களுடன் 702 ஓட்டங்களை குவித்து, அண்மைக்காலமாக முதல்தர போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் ரொஷேன் சில்வா தொடர்ந்தும் தேர்வாளர்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

சுழல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோருடன், சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா செயற்படவுள்ளார். குழாமில் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் காணப்படுகின்றனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), ஓஷத பெர்ணான்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், வனிந்து ஹஸரங்க (உபாதையால் குழாமிலிருந்து வெளியேறுகிறார்)

டெஸ்ட் தொடர் அட்டவணை

  • 19 – 23 மார்ச் – முதலாவது டெஸ்ட் போட்டி – காலி சர்வதேச மைதானம் 
  • 27 – 31 மார்ச் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – SSC மைதானம், கொழும்பு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<