இலகு வெற்றியுடன் ஆஷஸ் தொடரை ஆரம்பித்த அவுஸ்திரேலியா

166
(Photo by Ryan Pierse/Getty Images)

தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு காலப்பகுதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் அபாரமாக வெற்றி பெற்று தொடரை சிறந்த முறையில் ஆரம்பித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறும் பெரும் மோதலான ஆஷஸ் கிண்ணத் தொடரின் இம்முறை போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெறும் இப்போட்டித் தொடர் 70வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை ஆரம்பம்

உலகின் மிகவும் பழமையான சர்வதேச கிரிக்கெட் போட்டித்…

ஏற்கனவே நடைபெற்ற 69 தொடர்களில் இரு அணிகளும் தலா 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 5 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. எனவே இம்முறை தொடர் மிகவும் தீர்மானம் மிக்கதாக அமைந்துள்ளது. அதுபோன்றே, அண்மைய காலங்களில் இரு அணிகளும் வெளிப்படுத்திய திறமைகளின் பொருட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொடர் அவுஸ்திரேலிய நாட்டின் 5 நகரங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது போட்டி பிரிஸ்பேன் நகரின் கப்பா அரங்கில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலஸ்டயர் குக் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் மார்க் ஸ்டோன்மன் ஆகியோர் முறையே பெற்ற 83, 53 ஓட்டங்களின் உதவியுடனும் பின்வரிசையில் வந்த டேவிட் மாலன், மொயின் அலி மற்றும் ஸ்டோர்ட் ப்ரோட் ஆகியோர் முறையே பெற்ற 56, 38, 20 ஓட்டங்களின் உதவியுடனும் 302 ஓட்டங்களை  இங்கிலாந்து அணி கடந்தது. பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. எனினும் மறுமுனையில் நிதானமாக அணித் தலைவர் என்ற பொறுப்புடன் ஆடிய ஸ்மித் சதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியினை கௌரவமான நிலைக்கு (328 ஓட்டங்கள்) இட்டுச் சென்றார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் ப்ரோட் 3 விக்கெட்டுகளையும் அண்டர்சன் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்

இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும்..

அவுஸ்திரேலிய அணி 26 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சினைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலஸ்டயர் குக் மீண்டும் ஏமாற்றமளித்தார்.  முதல் இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜேம்ஸ் வின்ஸ்சும் வந்த வேகத்தில் ஓய்வறை திரும்ப இங்கிலாந்து அணி தடுமற்றத்தினை எதிர்நோக்கியது.

தொடர்ந்து மிகச்சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்களை தொடர்ச்சியான இடைவெளிகளில் கைப்பற்றியது. எனினும் மறுமுனையில் நிதானமாக ஆடிய அணித் தலைவர் ஜோ ரூட் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வந்த மொயின் அலி மற்றும் ஜோன்னி பர்ட்சோ ஆகியோர் நிதானமாகத் துடுபெடுத்தாடிய போதும் இருவரும் அரைச் சதத்தினை அண்மித்த வேளை ஆட்டமிழந்தனர்.

ஏனைய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தமது 2ஆவது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 40 ஓட்டங்களையும் ஜோன்யி பெர்ட்சோ 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க், நதன் லியோன் மற்றும் ஜோஸ் ஹசல்வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பின்னர் தீர்மானம் மிக்க இந்த தொடரின் முதல் போட்டி வெற்றிக்காக 170 என்ற இலகுவான இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் பென்க்ரோப்ட் ஆகியோரின் மிகச்சிறப்பான இணைப்பாட்டம் மூலம் எவ்வித விக்கெட் இழப்புமின்றி வெற்றி இலக்கினை அடைந்தது.

கோஹ்லியின் இரட்டைச் சதத்துடன் இந்தியா மேலும் வலுவான நிலையில்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்…

சிறந்த முறையில் துடுப்பாடிய டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும், கேமரோன் பென்க்ரோப்ட் ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 1988ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அவுஸ்திரேலிய அணி கப்பா மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை அடிலைட்டில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 302/10 (116.4) மார்க் ஸ்டோன்மன் 53, ஜேம்ஸ் வின்ஸ் 83, டேவிட் மாலன் 56, மொயின் அலி 38,  மிச்சல் ஸ்டார்க் 3/77, பெட் கம்மின்ஸ் 3/85, நதன் லியோன் 2/78, ஜோஸ் ஹஸல்வூட் 1/57.

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 328/10 (130.3) ஸ்டீவன் ஸ்மித் 141*, சோன் மார்ஷ் 51, பெட் கம்மின்ஸ் 42, டேவிட் வோர்னர் 26,  ஸ்டோர்ட் பரோட் 3/49, ஜேம்ஸ் ஆண்டர்சன் 2/50, மொயின் அலி 2/74, க்றிஸ் வோக்ஸ் 1/67, ஜேக் போல் 1/77, ஜோ ரூட் 1/10

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 195/10 (71.4) ஜோ ரூட் 51, ஜோன்னி பெர்ட்சோ 42, மொயின் அலி 40, மார்க் ஸ்டோன்மன் 27, மிச்சல் ஸ்டார்க் 3/51, ஜோஸ் ஹஸல்வூட் 3/46, நதன் லியோன் 3/67, பெட் கம்மின்ஸ் 1/23

அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 173/0 (50) டேவிட் வோர்னர் 87*, கேமரோன் பென்க்ரப்ட் 82*.

போட்டியின் முடிவுஅவுஸ்திரேலியா 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது