9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 22ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ரஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்தது 118  ஓட்டங்களை மட்டுமே பெற்றது. சன் ரயிசஸ் அணி சார்பாக சீகர் தவான் ஆட்டம் இழக்காமல் 53 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்களையும், புவனேஷ்வர் குமார் 8 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சார்பாக பந்து வீச்சில் அஷோக் டிண்டா 3 விக்கட்டுகளையும், மிச்சல் மார்ஷ் 2 விக்கட்டுகளையும் சரிக்க திசர பெரேரா மற்றும் ரவி அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.

பதிலுக்கு 119 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது மழைக் குறுக்கிட்டமையால் இடைநிறுத்தப்பட்டது. பின் D/L முறையில் பூனே அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களையும், பெப் டுப்லசிஸ் 21 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். சன் ரயிசஸ் அணியின் சார்பாக பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், அஷிஷ் நெஹ்ரா மற்றும் மொயிசஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் அஷோக் டிண்டா  தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்