சுகாதார வழிகாட்டல்களுடன் 2021இல் விளையாட்டுப் பயிற்சிகள்

156

கொவிட் – 19 வைரஸ் காரணமாக தடைப்பட்டுள்ள அனைத்து விளையாட்டுகளுக்குமான பயிற்சிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீண்டும் ஆரம்பிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, , கிராமப்புற மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனுக விதானகமகே மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சில் நேற்று (05) இடம்பெற்றது

2021இல் வடக்கின் விளையாட்டிற்கு பாரிய வேலைத்திட்டங்கள்

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், விளையாட்டு சங்கங்கள், சம்மேளனங்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலின் போது பங்குபற்றியிருந்தனர்

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் பாதுகாப்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பயிற்சிகளை ஆரம்பிக்கவேண்டியதன் அவசியம் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது

மேலும் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பயிற்சிகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு இதன்போது அனைவராலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் தனி நபர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளையும், உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பற்றதும், நோய் தோற்றாததுமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அதுமாத்திரமின்றி, நேரடியாக முட்டிமோதும் றக்பி உள்ளிட்ட மிகவும் அபாயகரமான விளையாட்டுப் போட்டிளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் ஒரு மாதத்தில் விரிவாக ஆராய்ந்த பின்னர் அவற்றை கடும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஆரம்பிக்கலாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கொரோனாவால் மீண்டும் தடைப்பட்ட உள்ளூர் விளையாட்டு

இதனிடையே, கொவிட் – 19 வைரஸின் தாக்கம் அதிகம் காணப்படுகின்ற மேல் மாகாணம் மற்றும் கொரோனா பரவி வரும் ஏனைய பிரதேசங்களைத் தவிர்ந்த நாட்டின் எஞ்சிய பகுதிகளில் விளையாட்டுக்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதன்படி, விளையாட்டுக்களை நடத்தும்போது பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் பொதுவான பொறுப்புக்கள் உள்ளன.

எனவே, விளையாட்டுக்களை ஆரம்பிப்பதற்கு அவசியமான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சும், விளையாட்டுத்துறை அமைச்சும் கூட்டாக வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<