விஷேட உடல் தகுதி சோதனைக்கு உள்வாங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

780

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதியை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை கிரிக்கெட் சபை வீரர்களுக்கான விஷேட உடல் தகுதி பரிசோதனைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடனான சுற்றுப் போட்டிகளுக்கு அணியை ஆயத்தம் செய்யும் முகமாகவே இந்த விஷேட பரிசோதனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குறுசிங்கவின் தலைமையில் உயர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மாலிங்க பணத்திற்காகவே அதிகமாக விளையாடுகின்றார் : அமைச்சர் தயாசிறி

நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடனேயே இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதற்கு, இலங்கை வீரர்களின் மிக மோசமான களத்தடுப்பே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பின்னர், வீரர்களின் உடல் தகுதி மோசமாக உள்ளது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றம் சுமத்தியதுடன், எதிர்காலத்தில் உடல் தகுதி அற்ற எந்த வீரரையும் அணியில் இணைக்க தான் அனுமதி வழங்குவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு நிலையிலேயே இந்த திட்டம் ஆராம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அசங்க குறுசிங்க, ”அணியின் கடந்த கால செயற்பாடுகளைத் தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டோம். அதன் இறுதியில் எமது களத்தடுப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்ந்தோம்.

அதன்படி, கடந்த 16ஆம் திகதி 30 வீரர்களைக் கொண்ட ஒரு இடைக்கால குழாமை தேர்வுக்குழுவினர் தெரிவு செய்துள்ளனர். தற்பொழுது அவர்களுக்கான உடல் தகுதி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஎனத் தெரிவித்தார்.  

கிரிக்கெட் மூலம் ஒன்றுபடும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் சகோதரர்கள்

இதன்படி, நேற்று கொழும்பு R.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற முதல் கட்ட பயிற்சிகள் இலங்கை கிரிக்கெட்டின் உடல் தகுதிப் பயிற்சி மற்றும் புனர்வாழ்வு முகாமையாளர் நிர்மாலன் தனபாலசிங்கம் அவர்களின் கண்கானிப்பில் இடம்பெற்றது.

எவ்வாறிருப்பினும், தற்பொழுது சர்வதேச ஒருநாள் தரவரிசையில் 8ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை அணி அடுத்து விளையாடவுள்ள இரண்டு தொடர்களும், மிகவும் முக்கிய தொடர்களாகவே உள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி காணப்படும் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலானது, அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதியான அணிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்குரிய இறுதிப் பட்டியலாக இருக்கும். குறித்த நாளில் ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணியுடன் சேர்த்து முதல் 7 இடங்களைப் பெற்றிருக்கும் அணிகளே (மொத்தம் 8 அணிகள்) அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தெரிவாகும்.

எனவே, இலங்கை அணி தரவரிசையில் மேலும் பின்தள்ளப்படாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, அண்மைக் காலங்களில் அணியில் விடப்பட்ட தவறுகளை சரி செய்து, வீரர்கள் பூரண உடல் தகுதியுடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.