இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்

England Cricket

7

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறப்பு ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நொட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இதனைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடையும் வரை நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதியை, இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. 

இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டிம் சௌதியின் பரந்த அனுபவம் மற்றும் உலகின் பல்வேறு ஆடுகளங்களிலும் விளையாடியுள்ள அனுபவம் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு உதவியாக இருக்கும். இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்று T20i மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள், அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரையிலும் டிம் சௌதி ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் செயல்பட்டு வரும் நிலையில், தற்சமயம் மற்றொரு நியூசிலாந்து முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரையும் இங்கிலாது கிரிக்கெட் சபை பயிற்சியாளர்கள் குழுவில் இணைத்துள்ளது அந்த அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நியூசிலாந்து அணிக்காக கடந்த 2008அம் ஆண்டு அறிமுகமான டிம் சௌதி, 107 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 126 T20i போட்டிகளில் விளையாடி மொத்தமாக 776 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டிம் சௌதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<