தெற்காசிய விளையாட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறும்

78

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடத்துவதற்கு நேபாள ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா திட்டமிட்டபடி இவ்வருட இறுதியில் நடைபெறும் என இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்களுக்கு கட்டுப்பாடு

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள ஒவ்வொரு…

முன்னதாக 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்றதுடன், அடுத்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

எனினும், குறித்த போட்டித் தொடர் கடந்த வருடம் நடைபெறவிருந்தாலும், நேபாள அரசு அதற்கான நிதியினை ஒதுக்குவதற்கு முன்வராமை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளை நடத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் கடந்த வருடம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், நேபாள அரசாங்கத்தின் தலையீட்டினால் ஏற்கனவே திட்டமிட்டபடி தெற்காசிய விளையாட்டு விழாவை தாமே நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம், தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இதனையடுத்து தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஜுலை மாதம் நேபாள தலைநகர் கத்மண்டுவில் இடம்பெற்றது. இதன்போது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு நேபாள அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதற்கான அனுமதியை தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் குறித்த கூட்டத்தொடரின் போது வழங்கியது.

இது இவ்வாறிருக்க, இம்மாத முற்பகுதியில் நேபாள ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

எனினும், அதன் தற்போதைய தலைவரான ஜீவன் ராம் ஷ்ரேஸ்தா தேர்தல் பிரச்சாரங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகத் தெரிவித்து ஒருசில தரப்பினரால் அவருக்கு எதிராக அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனையடுத்து அந்த நாட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு விசாரணைக்கு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு தற்காலித் தடை விதிக்க நேபாள உயர்நீதிமன்ற நீதிபதி பஹதூர் மொக்தான் நடவடிக்கை எடுத்தார். 

அதன்படி, இடம்பெற்றுவந்த அனைத்து விசாரணைகளும் கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி நேபாள ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. 

தேர்தலின் போது இடம்பெறுகின்ற முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் அதனை அவதானிப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மற்றும் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்படி, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் தலைவரான உமேஷ் லால் ஷ்ரேஸ்தாவை 7 மேலதிக வாக்குகளால் வீழ்த்திய அவருடைய சகோதரரும், தற்போதைய தலைவருமான ஜீவன் ராம் ஷ்ரேஸ்தா மீண்டும் நேபாள ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகத் தெரிவானார்.

வடமாகாண விளையாட்டு விழாவில் இரட்டைச் சாதனை படைத்த பிரகாஷ்ராஜ், கிந்துசன்

வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் சம்மெட்டி எறிதலில் எஸ். பிரகாஷ்ராஜ் மற்றும் …

எனவே, கடந்த சில வருடங்களான இழுபறி நிலையில் இருந்துவந்த நேபாள ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இதில் மீண்டும் தலைவராகத் தெரிவாகிய ஜீவன் ராம் ஷ்ரேஸ்தா கருத்து தெரிவித்த போது, 

நேபாள ஒலிம்பிக் சங்கத்தின் தவைராகத் தெரிவாகியதை இட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனிவரும் காலங்களில் எமது சங்கத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் எந்தவொரு செயற்பாடும் இடம்பெறுவதற்கு இடமளிக்கமாட்டேன். 

அதேபோல, திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளத்தில் மிகவும் விமர்சையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

தெற்காசிய விழாவின் அங்குரார்ப்பண போட்டிகள் 1984 ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு விழா நேபாளத்தில் நடைபெற்றிருந்ததுடன், தற்போது மூன்றாவது முறையாகவும் தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளம் நடத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இவ்விளையாட்டு விழா நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பொக்காரவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பாக சுமார் 600 வீர, வீராங்கனைகள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<