மாலைத்தீவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி இலகு வெற்றி

82

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இன்று (5) இடம்பெற்ற போட்டியில் மாலைத்தீவு கிரிக்கெட் அணியினை 98 ஓட்டங்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இலங்கை ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு அபார வெற்றிகள்

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் தொடரில்…

தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுவரும்  இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி தாம் முன்னர் விளையாடிய போட்டிகள் இரண்டிலும் வெற்றியினைப் பதிவு செய்த நிலையில் மாலைத்தீவு கிரிக்கெட் அணியினை எதிர்கொண்டிருந்தது.

கிர்த்திப்பூர் நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணிக்கு கமிந்து மெண்டிஸ் அதிரடியான சதம் ஒன்றினைப் பெற்றுக்கொடுத்தார். 

கமிந்து மெண்டிஸின் சதத்தோடு இலங்கை வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டனர். அணியின் துடுப்பாட்டம் சார்பில் கமிந்து மெண்டிஸ் 54 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம், அஷேன் பண்டார 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாலைத்தீவு அணியின் பந்துவீச்சு சார்பில் லீம் சபிக், அஸியன் பஹாத், இப்றாகிம் றிசான் மற்றும் மொஹமட் மஹ்பூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 193 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மாலைத்தீவு கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.  

மாலைத்தீவு அணியின் துடுப்பாட்டம் சார்பில் மொஹமட் றிஸ்வான் 29 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், இலங்கை அணியின் வெற்றியினை அசித்த பெர்னாந்து, கவிஷ்க அஞ்சுல மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 192/4 (20) கமிந்து மெண்டிஸ் 102(54), அஷேன் பண்டார 26(14)*, அஸியான் பர்ஹாத் 27/1(4) 

மாலைத்தீவு – 94/9 (20) மொஹமட் றிஸ்வான் 29(23), நிஷான் பீரிஸ் 9/2(4), அசித்த பெர்னாந்து 14/2(4), கவிஷ்க அஞ்சுல 21/2(4)

முடிவு – இலங்கை ஆடவர் கிரிக்கெட்  அணி 98 ஓட்டங்களால் வெற்றி