ஜப்பான் கால்பந்து சம்மேளனம், இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து முதல் முறையாக நடாத்தும் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஜப்பான் – தெற்காசிய கால்பந்து சுற்றுப் போட்டி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு கொள்ளும் இந்த தொடர் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு ரேஸ் கோர்ஸ் அரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்கால விளையாட்டு வளர்ச்சியை முக்கியமாகக் கருத்தில் கொண்டு, ”நாளைய தினத்திற்கான விளையாட்டு” என்ற கருப்பொருளில் ஜப்பான் அரசாங்கம் இந்த சுற்றுத் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

மூன்று கட்டங்களாக இடம்பெறும் 16 வயதின் கீழ் தேசிய அணிக்கான விரர்கள் தேர்வு

இவ்வருடம் இடம்பெறவுள்ள 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான சர்வதேச போட்டிகளுக்காக இலங்கையின் 16 வயதின் கீழ் தேசிய அணியை தெரிவு…

இந்த சுற்றுத் தொடர் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, கொழும்பு கால்பந்து இல்லத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாலேந்திரன், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வர், ஜப்பான் தூதரகத்திற்கான பிரதம பொதுஜன தொடர்பாடல் அதிகாரி யுசுகி டனாகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

அங்கு கருத்து தெரிவித்த திரு. யுசுகி டனாகா, ”ஜப்பான் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுத் தொடர், ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு செயலாக உள்ளது” என்றார்.

குறித்த போட்டித் தொடர் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டிகளாக இருந்தாலும், அதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதாவது, தொடரில் பங்கு கொள்ளும் ஜப்பான் 16 வயதின் கீழ்ப்பட்ட அணியில், அந்நாட்டின் மிகப் பெரிய போட்டித் தொடரான J லீக்கில் (ஜப்பான் பிரீமியர் லீக்) விளையாடும் வீரர்கள் சிலர் அங்கம் வகிக்கின்றனர். எனவே, அவர்களின் திறமை சிறந்த முறையில் இருக்கும் என்ற காரணத்தினால், ஏனைய மூன்று நாடுகளின் அணிகளிலும் (இலங்கை, நேபால், பூட்டான்) 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 5 பேரை இணைத்துக் கொள்ளுமாறு ஜப்பான் கேட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கை அணியிலும் 19 வயதுக்கு உட்பட்ட சிறந்த வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளனர்.   

தொடரில் பங்கு கொள்ளும் இலங்கை அணி வீரர்களுக்கான தெரிவு கடந்த ஜனவரி மாதம் கொழும்பில்பல கட்டங்களாக இடம்பெற்றன. அதன்போது, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்த வீரர்களில் இருந்து தற்பொழுது 32 பேர் கொண்ட குழாம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊடவியலாளர் சந்திப்பில் அது தொடர்பிலான விளக்கத்தை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்,

”இத்தொடருக்கான அணியின் தெரிவிற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். அதிலிருந்து 40 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து தெரிவாகிய 32 வீரர்கள் தற்பொழுது கொழும்பில் தங்கி தொடர்ச்சியாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தொடர் எமக்கு கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஜப்பான் அரசினால் நாமும், பூட்டான் மற்றும் நேபால் ஆகிய நாடுகள் இந்த தொடரின் மூலம் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ளவுள்ளன” என்றார்.

இத்தொடருக்கான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல பயிற்றுவிப்பாளர் சுசுகி ஷிகாசி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது, இலங்கையின் இளம் வீரர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பயிற்சியையும், அனுபவத்தையும் பெற்றுக்கொடுக்கவுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பின் புகைப்படங்கள்

இந்த தொடரானது, இவ்வருடத்தில் இடம்பெறவுள்ள இரு முக்கிய தொடர்களான, தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தொடர் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தொடர் என்பவற்றுக்கு ஒரு தயார்படுத்தும் போட்டித் தொடராகவும் அமையவுள்ளது.

தற்பொழுது தெரிவாகியுள்ள 32 பேர் கொண்ட குழாம்

ஸாஹிரா கல்லூரி – மொஹமட் இஷான், மொஹமட் சஹீல், மொஹமட் முஷ்பிர், மொஹமட் முர்ஷீட், ஆகிப் பைசல், நபீல் நிசாம்
ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி – மஹேந்திரன் தினேஷ், மொஹமட் ஆசிக்
புனித ஹென்ரியரசர் கல்லூரி – ஜுட் சுமன், P. ரெக்சோன்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – பிரனீத் சமிந்த, சன்தீப வாஸ்
அல் அதான் கல்லூரி – மொஹமட் அப்ரான்
புனித பேதுரு கல்லூரி – மொஹமட் சபீர், இஷான் தனூஷ
புனித பப்டிஸ்ட் தமிழ் பாடசாலை கெகிராவ – டேவிட் வீரசிங்க
புனித மரியார் கல்லூரி, நாவலபிடிய – மொஹமட் பைசர்
வித்யாலோக கல்லூரி, காலி – ஷெஹான் யெஸ்மில
ஓல் சயின்ட் கல்லூரி, காலி – விகும் அவிஷ்க
பெர்ரவேர்த கல்லூரி, கண்டி – சஜித் லக்ஷான்
ரன்பொகுனுகம ம.வி, நிட்டபுவ – மொஹமட் உமர்
விஷன் சர்வதேசப் பாடசாலை, கண்டி – மொஹமட் ரிகாஸ்
அல் ஹிலால் தேசிய பாடசாலை, நீர்கொழும்பு – மொஹமட் சிபான்
மலியதேவ ஆண்கள் கல்லூரி, குருனாகலை – M.J. சமொத்
அஜ்மீர் தேசியா பாடசாலை, உகுவலை – மொஹமட் ருக்ஷான்
நாலந்த கல்லூரி – C.H. கொடிதுவக்கு
மகாஜன கல்லூரி, யாழ்ப்பாணம் – ரவி குமார் தனூஜன்
புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி – D.K.V.சுலக்ஷன
ஹம்சா கல்லூரி, கொழும்பு – D. சுரேன்
I.L.M. சம்சுதீன் தேசிய பாடசாலை, பேருவளை – அப்துல்லா பாரிஸ்
புனித ஜோசப் கல்லூரி – லுஷான் டி சில்வா
சயன்ஸ் கல்லூரி – யசஸ் கவிந்து சூரே

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, இலங்கை அணியை வலுப்படுத்தும் அனுபவம் மிக்க ஒரு முக்கிய வீரராக உள்ள யாழ்ப்பாணம் ஹென்ரியரசர் கல்லூரி வீரர் ஜூட் சுமன் சுகயீனமுற்றுள்ளமையினால், அவர் தொடரில் பங்கு கொள்வது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், அவருக்கு பதில் ஒரு மாற்று வீரர் அணிக்குள் உள்வாங்கப்படலாம் என்றும் நம்பப்படுகின்றது.