தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை மகளிர் அணி 30 ஓட்டங்களால் டக்வத் லுவிஸ் முறைப்படி தோல்வியை சந்தித்தது.
ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணி மேலும் இரண்டு புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. இந்த சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை மகளிர் அணி இதுவரை 10 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொட்சஸ்ட்ரூமில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க மகளிர் அணி நேர்த்தியாக ஓட்டங்களை பெற்று 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களை குவித்தது.
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் போராடித் தோற்ற இலங்கை மகளிர்
ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை லோரா வொல்வார்ட் (64) மற்றும் லாரா கூட்டோல் (52) நிதானமாக ஓட்டங்களை பெற்றதோடு மத்திய பின்வரிசையில் மிர்சானா கேப் 34 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில் போட்டி மழையால் தடைப்பட்டதால் இலங்கை மகளிர் அணிக்கு 47 ஓவர்களில் 262 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி 23 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தபோதும் அணித்தலைவி சமரி அட்டபத்து மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.
அபாரமாக துடுப்பாடிய மரி அட்டபத்து 78 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 94 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததை அடுத்து இலங்கை மகளிர்களின் இறங்குமுகம் ஆரம்பமானது. சிறப்பாக துடுப்பாடிவந்த சஞ்சீவனி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே சசிகலா சிறிவர்தன ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழக்க மத்திய பின்வரிசையில் எவரும் நின்றுபிடித்து துடுப்பாடவில்லை.
இதனால் இலங்கை மகளிர் அணி 46.2 ஓவர்களில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர் அணி இதுவரை எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில் அந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<