டி20 உலகக் கிண்ணம் கடைசிக் கட்டத்தை நோக்கி சென்றுள்ள நிலையில்தற்போது வரையில் நியுசிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ள நிலையில் பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தற்போது வரையில் இந்த டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறி உள்ளன

இந்நிலையில் மற்றுமொரு முக்கியமான போட்டியொன்று நேற்று நாக்பூரில் அமைந்துள்ள விதர்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள டெரன் சமி தலைமையிலான பலமான மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது. அதே சமயம் எதிரணியான பெப் டுப்லசிஸ் தலைமையிலான தென் ஆபிரிக்கா அணிக்கு இது மிக முக்கியமானதொரு போட்டியாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு மங்கிவிடும் என்ற நிலையில் களமிறங்கியது தென் ஆபிரிக்கா அணி .

இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றி பெறுவது கடினம் என்று கூறப்படும் நாக்பூர் மைதானத்தில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின் விபரம்,

தென் ஆபிரிக்கா அணி :

பெப் டுப்லசிஸ் (தலைவர்), ஹசிம் அம்லா, குயிண்டன் டி கொக், ரில்லி ரூசோ.பி.டி விளியர்ஸ், டேவிட் மில்லர், டேவிட் வையிஸ், க்றிஸ் மொரிஸ், அரொன் பங்கீசோ , ககிசோ றபடா, இம்ரான் தாஹிர்

மேற்கிந்திய தீவுகள் அணி :

டெரன் சமி (தலைவர்) , என்டர் ப்லெச்சர், க்றிஸ் கெயில், ஜொன்சன் சார்ல்ஸ்மார்லன் செமுவல்ஸ், டினேஷ் ராம்டின், டுவேயின் ப்ராவோ, என்டர் ரசல்கார்லஸ் பரத்வைட், சாமுவேல் பத்ரி, சுலிமன் பென்

நடுவர்கள் : இயன் குட் மற்றும் ரிச்சர்ட் கெட்ல்ப்ரோ

டெரன் சமியின் தீர்மானத்திற்கு அமைய தென் ஆபிரிக்கா அணி சார்பாக ஹசிம் அம்லா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்தனர்.சமியின் முடிவு சரி என்று நிரூப்பிப்பது போல் தென் ஆபிரிக்கா அணி 20 ஓட்டங்களுக்குள் ஹசிம் அம்லா, தலைவர் பெப் டுப்லசிஸ் மற்றும் ரில்லி ரூசோ ஆகியோரின் விக்கட்டை இழந்து ஆரம்பத்திலேயே பெரும் தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்தது.

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட .பி.டி வில்லியர்ஸ் டுவெயின் பிராவோவின் நுட்பமான ஸ்லோ பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல்  விக்கட்டைப் பறிகொடுத்தார். அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் 1 ஓட்டத்தை மட்டுமே பெற்ற நிலையில் க்றிஸ் கெயில் வீசிய பந்தில் போல்டானார். அதன் பிறகு குயிண்டன் டி கொக்  மற்றும் டேவிட் வையிஸ் ஆகியோர் தென் ஆபிரிக்கா  அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6ஆவது விக்கட்டுக்காக இவர்கள் இருவரும் மிக நிதானமாக இணைந்து 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள்.

அதன்  பின் சிறப்பாக ஆடி வந்த குயிண்டன் டி கொக் 46 பந்துகளில் மூன்று  பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்களோடும்  டேவிட் வையிஸ் 26 பந்துகளில் இரண்டு  பவுண்டரிகள் அடங்கலாக 28  ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்க தென் ஆபிரிக்கா அணியின்  ஓட்டங்களைப் பெறும் வேகம் குறைந்தது.

கடைசி மூன்று ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆபிரிக்கா அணி வீரர்களால் 10 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் தென் ஆபிரிக்கா அணி  8 விக்கட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் சகல துறை ஆட்டக்காரர்களான க்றிஸ் கெயில், டுவேயின் ப்ராவோ, என்டர் ரசல் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

123 ஓட்டங்களைப் பெற்றால் அரை இறுதிப் போட்டிகளுக்குள் நுழையலாம் என்ற  வெற்றி  இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான க்றிஸ் கெயில் மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் ஆகியோர் களம் இறங்கினாலும் அவர்களால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த ஒரு  ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணியின் இனிங்ஸின் 5ஆவது பந்தில் அதிரடி வீரர் க்றிஸ் கெயில் 4 ஓட்டங்களோடு ககிசோ றபடாவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு களத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் 2ஆவது விக்கட்டுக்காக 29 ஓட்டங்கள் பகிரப்பட்ட பின் கடந்த இலங்கை அணியுடனான போட்டியில் வெற்றிக்கு காரணமாய் அமைந்த என்டர் ப்லெச்சர் 11 ஓட்டங்களோடு ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.

அதன் பின் குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் 3ஆவது விக்கட்டுக்காக 32 ஓட்டங்களும் 4ஆவது விக்கட்டுக்காக 21 ஓட்டங்களுமாக இணைப்பாட்டங்கள் மூலம் ஓட்டங்கள் பெறப்பட்டன. இவ்வாறு போட்டி சென்று கொண்டு இருந்தாலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பக்கமே போட்டி சாய்ந்து இருந்தது. அதன் பின் 100 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள் என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இருந்த போது பந்து வீச அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்க அணியின் சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அடுத்த அடுத்த பந்துகளில் 2 விக்கட்டுகளை வீழ்த்த போட்டி இரண்டு அணிகளுக்கும் சார்பாக மாறியது. இறுதியில் 3 விக்கட்டுகள் கைவசம் இருக்க 6 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை காணப்பட்டது. இறுதி ஓவரை றபடா வீச அதை பரத்வைட் முகங் கொடுத்தார். இறுதி ஓவரின் முதலாவது பந்தை வேகாமாக அடித்தாட முனைந்ததாலும் அது மட்டையில் படவில்லை. ஆனால் இரண்டாவதாக வீசப்பட்ட பந்தில் பரத்வைட் 6 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றியின் விளிம்பில் கொண்டு வந்து வைத்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 பந்துகள் மீதமிருக்க 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்று 6ஆவது டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் மார்லன் செமுவல்ஸ் 44 ஓட்டங்களையும், ஜொன்சன் சார்ல்ஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். தென் ஆபிரிக்கா அணியின் பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 2 விக்கட்டுகளையும் றபடா, மொரிஸ், பங்கீசோ மற்றும் வையிஸ் ஆகியோர் ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக  44 ஓட்டங்களைப் பெற்ற மார்லன் செமுவல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.  குழு ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ள நிலையில் இன்று  நடைபெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் குழு ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் அணியோடு இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவாகும். இன்றைய போட்டியிலும் எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறும் தென் ஆபிரிக்கா அணியுடனான போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி அரையிறுதிக்குத் தெரிவாகும்.  இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று  தென் ஆபிரிக்கா அணியுடனான போட்டியில் தோல்வியுற்றால் நிகர ஓட்ட வீதத்தின் படி முன்னிலையில் திகழும் அணி அரையிறுதிக்குத் தெரிவாகும்.