தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 113 ஓட்டங்களால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று (6) பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. போட்டியில் இலங்கை அணி சார்பாக கடந்த முதலாவது போட்டியில் விளையாடிய உபுல் தரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் நீக்கப்பட்டு அவிஷ்க பெர்ணான்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இணைக்கப்பட்டிருந்ததுடன் தென்னாபிரிக்க அணி டுவைன் பிரிடோரியஸ் இற்கு பதிலாக அன்டில் பெஹ்லுக்வாயோவை அணியில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டு ப்ளெசிஸின் சதத்துடன் தென்னாபிரிக்க அணிக்கு இலகு வெற்றி
தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி கொக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் அதிரடியாக தமது இன்னிங்ஸை ஆரம்பிக்க அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. 91 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அவ்வணியின் முதலாவது விக்கெட்டாக ஹென்ரிக்ஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டி கொக் தனது 14ஆவது சதத்தை வெறும் 6 ஓட்டங்களால் தவறவிட்டு 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து டஸ்ஸன் (2) மல்டர் (17) மில்லர் (25) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுபுறத்தில் அணித்தலைவர் டு ப்ளெசிஸ் அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிந்து வெளியேறினார். பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் அரங்கம் திரும்ப, இறுதியில் தென்னாபிரிக்க அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவ்வணியின் கடைசி 6 விக்கெட்டுகளும் 31 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டிருந்தது இலங்கை அணியின் சிறந்த பந்து வீச்சுக்கு எடுத்துக்காட்டாகும். இப்போட்டியில் 40 ஓட்டங்களை பெற்றிருந்த போது டு ப்ளெசிஸ் ஒருநாள் அரங்கில் 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 150 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய திசர பெரேரா மூன்று விக்கெட்டுகளையும் மாலிங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
Photos: Sri Lanka vs South Africa – 2nd ODI
252 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உட்பட முதல் மூன்று விக்கெட்டுகளையும் குறைந்த ஓட்டங்களுக்கு கைப்பற்றுவதில் தென்னாபிரிக்க வேகப் பந்து வீச்சாளர்கள் வெற்றி கண்டனர். நிரோஷன் திக்வெல்ல (6) அவிஷ்க பெர்ணான்டோ (10) மற்றும் குசல் பெரேரா (8) எனினும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த ஓஷத பெர்ணான்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பிய போதிலும் துரதிஷ்டவசமாக மெண்டிஸ் 24 ஓட்டங்களுடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்த ஓவரில் ஓஷத பெர்ணான்டோவும் ஆட்டமிழக்க இலங்கை அணி 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
இப்போட்டியில் துடுப்பாட்ட வீரர்களாக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தனஞ்சய டி சில்வா மற்றும் திசர பெரேரா ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க இலங்கை அணியின் தோல்வி உறுதியாகியது. இறுதியில் இலங்கை அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
சதத்தின் மூலம் பல சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோஹ்லி
தென்னாபிரிக்க அணி சார்பாக இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய ககிசோ ரபாடா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டாக நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டை கைப்பற்றியிருந்தது விஷேட அம்சமாகும். மேலும் இங்கிடி, நோர்ட்ஜே மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்காற்றியிருந்தனர்.
இலங்கை அணி ஒருநாள் தொடரை தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றுமா என்பதை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
முடிவு – தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட நாயகன் – குயின்டன் டி கொக்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<