தென்னாபிரிக்காவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

203

தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களால் த்ரில் வெற்றி ஒன்றை பெற்று மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

அடிலெய்ட்டில் இன்று (09) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி 231 ஓட்டங்களையே பெற்ற நிலையில், அந்த அணி வீரர்களால் குறித்த ஓட்டங்களை காத்துக் கொள்ள முடிந்தது. எட்ட முடியுமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த தென்னாபிரிக்கா 15 ஓவர்கள் முடிவில் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களின்…

எனினும் தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் 5 ஆவது விக்கெட்டுக்கு 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற அந்த அணி ஸ்திரமான நிலையை எட்டியது. இந்நிலையில் பட் கம்மின்ஸ் 30 ஆவது ஓவரில் 47 ஓட்டங்களுடன் இருந்த டூ பிளசிஸை ஆட்டமிழக்கச் செய்தபின் தென்னாபிரிக்க அணி சரிவை சந்தித்தது.    

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் தனது பந்துவீச்சாளர்களை கச்சிதாமாக மாற்றி தென்னாபிரிக்க அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிவந்த மில்லரும் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட வேகம் மந்தமடைந்தது.  

இதனால் தென்னாபிரிக்க அணிக்கு கடைசி ஓவருக்கு 20 ஓட்டங்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது தனது முதலாவது ஓவரைப் போடவந்த கிளன் மெக்ஸ்வெல் அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதிசெய்து அந்த அணி தொடர்ச்சியாக சந்தித்த ஏழு தோல்விகளுக்கு முடிவு கட்டினார்.

இதன்படி தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜனவரியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணி கடந்த எட்டு ஒருநாள் போட்டிகளில் ஏழாவது தடவையாகவே நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை துடுப்பெடுத்தாட முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.

அலெக்ஸ் கரே 72 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றதோடு கிறிஸ் லைன் 44 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பின்ச் 63 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் நின்று பிடித்து ஆடாதது அந்த அணிக்கு ஓட்டங்களை அதிகரிக்க முடியாமல் போனது.

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ றபாடா 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ட்வயின் பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டெல் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (11) ஹொர்பாட்டில் நடைபெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா 231 (48.3) – அலெக்ஸ் கரே 47, கிறிஸ் லைன் 44, ஆரோன் பின்ச் 41, ககிசோ ரபாடா 4/54, ட்வயின் பிரிடோரியஸ் 3/32, டெல் ஸ்டெயின் 2/31

தென்னாபிரிக்கா 224/9 (50) – டேவிட் மில்லர் 51, டூ பிளசிஸ் 47, மார்கஸ் ஸ்டோயினிஸ் 3/35, ஜோன் ஹெஸில்வூட் 2/42, மிச்சல் ஸ்டார்க் 2/51

முடிவு – அவுஸ்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி