தென்னாப்பிரிக்கா ஒருநாள், T20I அணிக்கு புதிய தலைவர்

370

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், T20i மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள், T20i மற்றும் டெஸ்ட் அணிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்திய டெம்பா பவுமா, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i தொடர்களிலிருந்து நீக்கப்பட்டு டெஸ்ட் அணியின் தலைவராக மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, முன்னணி வேகப் பந்துவீச்சாளர் கங்கிசோ ரபாடாவுக்கு இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் T20i தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் அணியுடன் அவர் இணையவுள்ளார்.

இதன்படி, இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் T20i தொடர்களின் தலைவராக அதிரடி வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய அணியுடன் நடைபெறவுள்ள மூவகை தொடர்களிலும் அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 23 வயது விக்கெட் காப்பு சகலதுறை வீரர் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். யான்சென், கோட்ஸீ, என்ஜிடி ஆகியோர் முதல் 2 T20i போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளனர். அதன் பிறகு டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், உள்ளூர் போட்டிகளில் பயிற்சி பெறுவார்கள்.

மேலும் அறிமுக வீரர்களாக ஓட்னியேல் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், மிஹ்லலி மபோங்வானா ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர, நட்சத்திர வீரர்களான டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா T20i அணி விபரம்: எய்டன் மார்க்ரம் (தலைவர்), ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி விபரம்: எய்டன் மார்க்ரம் (தலைவர்), ஒட்னியேல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மிஹ்லலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி விபரம்: டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஸோர்ஸி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, கீகன் பீட்டர்சன், கங்கிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கைல் வெர்ரைன்.

போட்டி அட்டவணை

  • 10 டிசம்பர் – முதல் T20i போட்டி, டர்பன்
  • 12 டிசம்பர் – 2ஆவது T20i போட்டி, க்கெபெர்ஹா
  • 14 டிசம்பர் – 3ஆவது T20i போட்டி, ஜோகன்னஸ்பர்க்
  • 17 டிசம்பர் – முதல் ஒருநாள் போட்டி, ஜோகன்னஸ்பர்க்
  • 19 டிசம்பர் – 2ஆவது ஒருநாள் போட்டி, க்கெபெர்ஹா
  • 21 டிசம்பர் – 3ஆவது ஒருநாள் போட்டி, பார்ல்
  • 30 டிசம்பர் – முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சுரியன்
  • 07 ஜனவரி – 2ஆவது டெஸ்ட் போட்டி, கேப் டவுன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<