T20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்; ரஷித் கான் சாதனை

ICC T20 World Cup – 2021

76
Getty Image

T20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் படைத்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத் தொடரில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற சுபர் 12 லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இதனிடையே குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மாட்டின் கப்டிலை போல்டாக்கி, தனது 400ஆவது T20 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், அனைத்து வகையான T20 கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்களை அதிவேகமாகக் கைப்பற்றிய உலகின் நான்காவது வீரராக ரஷித் கான் இடம்பிடித்தார்.

T20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டுவைன் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்) மற்றும் தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

முன்னதாக T20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ரஷித் கான் படைத்தார்

குறித்த மைல்கல்லை டிம் சௌதி, சகிப் அல் ஹசன் மற்றும் லசித் மாலிங்கவிற்குப் பிறகு எட்டிய உலகின் நான்காவது வீரராகவும் அவர் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

23 வயதாகும் ரஷித் கான் கடந்த 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 56 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தற்போது 23 வயதாகும் ரஷித் கான் இன்னும் குறைந்தது 10 ஆண்டுகள் விளையாடுவார் என்பது நிச்சயம். இதனால் கிரிக்கெட் உலகில் அவர் பல சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<