பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள், பாதுகாப்பு விடயங்களை காரணம் காட்டி, உடனடியாக தாயகம் திரும்ப அனுமதி கோரியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அது தொடர்பிலான ஊடக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
>>முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!<<
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற கோர குண்டு வெடிப்பு காரணமாக இலங்கை வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்கள் தொடரில் தொடர்ந்து ஆடுவதில் அச்சம் காணப்படுவதாக கூறிய நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை இது தொடர்பில் உடனடியாக வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சுற்றுப்பயணக் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதிசெய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபையிடம் உறுதியளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி தொடர வேண்டும் என்று, இலங்கை கிரிக்கெட் சபை கட்டளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், இலங்கை கிரிக்கெட் சபையின் நேரடி உத்தரவை மீறி, எந்தவொரு வீரரோ அல்லது சுற்றுப்பயண உறுப்பினரோ இலங்கை திரும்ப முடிவு செய்தால், சுற்றுப்பயணம் எந்தத் தடையுமின்றி தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை உடனடியாக மாற்று வீரர்களை அனுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தரவுகளை மீறித் திரும்பும் வீரர்கள் அல்லது ஆதரவு ஊழியர்களின் நடவடிக்கைகள் குறித்து முறையான மதிப்பாய்வு நடத்தப்பட்டு, மதிப்பாய்வின் முடிவில் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















