சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் அட்டவணை அறிவிப்பு

74

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதி 16 அணிகள் சுற்றில் நடப்புச் சம்பியன் லிவர்பூல் அணி அடலெடிகோ மெட்ரிட் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு 13 முறை சம்பியனான ரியல் மெட்ரிட் அணி மன்செஸ்டர் சிட்டியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இறுதி 16 அணிகளுக்கு இடையிலான போட்டிகளைத் தீர்மானிகும் குலுக்கல் நிகழ்வு ஸ்விஸ் நகரான நியோனில் திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.  

2012 இறுதிப் போட்டியை மீட்டுவது போன்று செல்சி அணி பயேர்ன் முனிச்சை எதிர்கொள்வதோடு டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் மற்றும் RB லிப்சிக் அணிகள் சந்திக்கவுள்ளன. 

தவிர, இந்தச் சுற்றில் ப்ருசியா டொர்ட்முண்ட் எதிர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் நெபோலி எதிர் பார்சிலோனா அணிகள் மோதவுள்ளன. 

சிரீ A சம்பியனான ஜுவன்டஸ் அணி பிரான்ஸ் அணியான லியோனை எதிர்கொள்ளவுள்ளது. 

இதன் முதல் கட்டப் போட்டிகள் வரும் பெப்ரவரி 18, 19, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும். தொடர்ந்து அடுத்த கட்டம் மார்ச் 10, 11, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும். 

இந்தப் பருவத்தின் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி துருக்கியின் ஸ்தான்புல் நகரில் உள்ள அதாதுர்க் அரங்கில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அரங்கிலேயே ஏ.சி. மிலானுக்கு எதிராக லிவர்பூல் அணி வெற்றி பெற்ற 2005 இறுதிப் போட்டி நடைபெற்றது. 3-3 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை பெற்ற அந்த இறுதிப் போட்டியில் பெனால்டி அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. 

16 அணிகள் பலப்பரீட்சை 

  • ப்ருசியா டோர்ட்முண்ட் எதிர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
  • ரியல் மெட்ரிட் எதிர் மன்செஸ்டர் சிட்டி
  • அட்லாண்டா எதிர் வலென்சியா 
  • அட்லடிகோ மெட்ரிட் எதிர் லிவர்பூல்
  • செல்சி எதிர் பெயர்ன் முனிச்
  • லியோன் எதிர் ஜுவன்டஸ்
  • டொட்டன்ஹாம் எதிர் RB லிப்சிக்
  • நபோலி எதிர் பார்சிலோனா