ஹோமாகமவில் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் – ஷம்மி சில்வா

58

சர்ச்சையை ஏற்படுத்திய ஹோமாகமவில் நிர்மாணிக்கப்படவிருந்த சர்வதேச கிரிக்கெட் மைதானமானது கிரிக்கெட் விளையாடுகின்ற ஒரு சாதாரண மைதானமாக நிர்மாணிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். 

கொரோனா தொற்று இருப்பதை கண்டறிவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 150 மில்லியன் ரூபா பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரமொன்று விளையாட்டுத்துறை அமைச்சிடம் நேற்று (26) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்

இதில் கலந்துகொண்ட பிறகு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஷம்மி சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

”இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் கெத்தாராமவில் ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் போதும் இவ்வாறான பிரச்சினைகள் வந்தன.  

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவினால் தம்புள்ளை கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் போதும் இப்படித்தான் பிரச்சினைகள் ஏற்பட்டன

அதைவிட சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தை நிர்மாணிக்கின்ற போது பிரச்சினைகள் எழுந்தன. ஆனால் தற்போது அந்த அனைத்து மைதானங்களும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என என தெரிவித்தார்.

இதனிடையே ஹோமாகமவில் நிர்மாணிக்கடவுள்ள உத்தேச கிரிக்கெட் மைதானத்துக்கான நிலப்பரப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த வாரம் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டது

இதேவேளை, குறித்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஷம்மி சில்வா கருத்து தெரிவிக்கையில்

குறித்த மைதானத்தை ஒரு சாதாரண மைதானமாக நிர்மாணிக்கும்படி பிரதமரினால் எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே எம்மிடம் உள்ள நிதி நிலைமைகள் தொடர்பிலான அறிக்கையொன்றை பெற்றுக்கொண்ட பிறகு குறித்த மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளோம்.  

இதேநேரம், பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவிருந்த கிரிக்கெட் மைதானத்துக்கு 900 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டதாக வெளியாகிய செய்திகள் முற்றிலும் பொய்யானது என தெரிவித்த ஷம்மி சில்வா, அந்த மைதானத்துக்கான 100 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.  

புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் நட்சத்திரங்கள்

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸிற்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் திட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த அவர்

“நாங்கள் இந்த வருடத்துக்கான போட்டி அட்டவணைக்கு ஏற்ப சகல தொடர்களையும் நடத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றோம். அடுத்ததாக நாங்கள் இந்தியாவுடன் விளையாடவுள்ளோம். இந்திய அணியுடனான தொடர் குறித்து பிசிசிஐ இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.  

அதேபோல, இலங்கையில் தங்களது கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கு இன்னும் சில நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனிடையே .பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது குறித்து பிசிசிஐ எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவில்லை.  

மாறாக, ஏற்கனவே திட்டமிட்டபடி ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக் டி20 தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது” என அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<