திமுத் கருணாரத்னவின் அதிரடியோடு காலி அணிக்கு த்ரில்லர் வெற்றி

759
Kandy v Galle

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்திவரும் மாகாண அணிகளுக்கு இடையிலான T20 லீக் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் கண்டி அணியினை காலி அணி 7 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இன்று (25) ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் காலி அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

>> காலி அணியை சுழலால் சுருட்டிய தம்புள்ளை அணிக்கு இரண்டாவது வெற்றி

இதன்படி முதலில் துடுப்பாடிய காலி அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த குசல் மெண்டிஸ் நம்பிக்கை தந்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட மெண்டிஸ் 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்றார்.

மெண்டிஸை காலி அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஓய்வறை அனுப்பிய போதிலும், மூன்றாம் இலக்கத்தில் ஆடிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அதிரடியான முறையில் அரைச்சதம் ஒன்றினை விளாசி தனது தரப்பினை வலுப்படுத்தினார்.

திமுத் கருணாரத்னவின் அரைச்சதத்தோடும், பின்வரிசையில் அதிரடி காட்டிய அசேல குணரத்னவின் சிறு பங்களிப்போடும் காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன 49 பந்துகளுக்கு 12 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களையும், அசேல குணரத்ன இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று 14 பந்துகளுக்கு 20 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

கண்டி அணியின் பந்துவீச்சு சார்பாக இடதுகை சுழல் வீரரான மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 194 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணி இறுதி ஓவர் வரை போராடிய போதிலும் 8 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் பானுக்க ராஜபக்ஷ 33 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 63 ஓட்டங்களைக் குவித்து போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும், கண்டி அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் 30 ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை.

>> நான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்

காலி அணியின் பந்துவீச்சு சார்பாக நிஷான் பீரிஸ், கசுன் ராஜித, ஷெஹான் மதுசங்க, ஜெப்ரி வன்டர்செய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தனர்.

கண்டி அணியை வீழ்த்தியிருக்கும், காலி அணியானது இலங்கை கிரிக்கெட் சபையின் T20 லீக் முதல் வெற்றியை பெற்றுக் கொள்கின்றது.

ஸ்கோர் விபரம்

முடிவு – காலி அணி 7 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<