துஷான் ஹேமன்தவின் மிரட்டல் பந்துவீச்சில் கீரின்ஸ் அணிக்கு வெற்றி

156

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்துள்ள இலங்கை வீரர்களுக்கான T20 லீக் தொடரின் நான்காவது போட்டியில் கீரின்ஸ் அணியானது 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ப்ளூஸ் அணியினை அபாரமாக வீழ்த்தியிருக்கின்றது.

>>ஐசிசி தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்!

கொழும்பு SSC மைதானத்தில் இன்று (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற துனித் வெல்லாலகே தலைமையிலான ப்ளூஸ் அணியினர் முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தனர்.

இதன்படி முதலில் ஆடிய கீரின்ஸ் அணி தடுமாறிய போதும் கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்கள் பெற்றது.

கீரின்ஸ் அணித் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த சாமிக்க கருணாரட்ன 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற்றார்.

ப்ளூஸ் அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஞய மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>புவிதரன் போட்டிச் சாதனை; அசான், டக்சிதா, மிதுன்ராஜுக்கு தங்கம்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 159 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ப்ளூஸ் அணியானது தொடக்கம் முதலே தடுமாறியதோடு, இறுதியில் 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்கள் மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

கீரின்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சாமிக்க கருணாரட்ன 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

 

கீரின்ஸ் – 158/6 (20) கமிந்து மெண்டிஸ் 50, சாமிக்க கருணாரட்ன 41*, அகில தனன்ஞய 25/2

 

ப்ளூஸ் – 86 (15) தனன்ஞய டி சில்வா 18, துஷான் ஹேமன்த 18/4