ஜப்னா ஸ்டலியன்ஸ் மூலம் மாற்றம் பெறவுள்ள வட மாகாண கிரிக்கெட்

879
Jaffna Stallions

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் ஆடும் ஜப்னா ஸ்டலியன்ஸ் அணியின் அறிமுகமும் அவ்வணியில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தினை சேர்ந்த மூன்று இளம் வீரர்களுடனுமான ஊடக சந்திப்பும் நேற்று (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வினை ஜப்னா ஸ்டலியன்ஸ் அணியின் இணைப்பாளர் கணேஷன் வாகீசன் தலைமைதாங்கியிருந்தார்.  LPL இல் ஆடவுள்ள வீரர்களான கனகரத்தினம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோசன் ஆகியோரும், விருந்தினர்களாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.  பிரதீபன், யாழ் மாநகர முதல்வர் திரு. இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் திரு. நிஷாந்தன், சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் திரு. துசிதரன், யாழ் மத்திய கல்லூரி அதிபர் திரு.எழில்வேந்தன், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி. துசிதரன் ஆகியோரும், இரு கல்லூரிகளின் பயிற்றுவிப்பாளர்களான லவேந்திரா, வினோத் ஆகியோரும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

>> Photos : Jaffna Stallions Launch and press meet | LPL

“லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் 5 அணிகளில் ஒரு அணியான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியில் தேசிய, சர்வதேச வீரர்களுடன் இணைந்து யாழிலிருந்து மூன்று வீரர்கள் இணைந்திருப்பது மிக முக்கியமானதும், பெருமைக்குரிய விடயமாகும். இவர்கள் மூவரும் உங்களிற்கு புதியவர்கள் அல்ல, அவர்களது திறமை அவர்களினை இந்த இடத்திற்கு அழைத்துவந்திருக்கின்றது. இந்த இளம் வீரர்கள் மூவரும், எதிர்கால சந்ததியினை முன்னேற்றுவதற்கு முன்னோடிகளாக இருப்பார்கள்” என வாகீசன் கருத்து முன்வைத்தார்.  

>> லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நிறைவு

ஜப்னா ஸ்டலியன்சின் ஊடக வெளியீட்டில் “மேற்படி வீரார்களின் உள்ளடக்கமானது யாழ்ப்பாணத்தின் கிரிக்கெட் வீரர்களிற்கு மாத்திரமன்றி இலங்கையின் சகல கிராமங்களிலுமுள்ள கிரிக்கெட் வீரர்களிற்கு உந்துசக்தியாக அமையும். அதேவேளை, விரைவில் யாழ்பாணத்தினை தளமாக கொண்டு ஜப்னா ஸ்டலியன்ஸ் – தொழில் முறை கழகம் ஒன்றினை உருவாக்கவுள்ளதனையும், குறித்த கழகம் வடக்கு மாகாணத்தில் சகல வசதிகளுடன் கூடிய மைதானம் மற்றும் பயிற்சி நிலையம் ஒன்றினை நிறுவுவதற்குரிய ஏற்பாடுகளினையும் கொண்டிருக்கும். அத்தோடு அந்த அணியில் வடக்கு வீரர்கள் மட்டுமன்றி இலங்கையின் வறிய பிரதேசங்களினை சேர்ந்த சகல வீரர்களிற்கும் கிரிக்கெட் சந்தர்ப்பத்தினை வழங்கும்” என தெரிவித்துள்ளனர்.  

குறித்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. பிரதீபன், “நாம் அனைவரும் ஐ.பி.எல் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் எங்களது வீரர்கள் மூவர் பங்கெடுப்பது மகிழ்ச்சியினை தருகின்றது. இவர்கள் இந்த மாவட்ட வீரர்களிற்கு தொடர்ந்து முன்னோடிகளாக திகழவேண்டும்” என தெரிவித்தார். 

யாழ் மாநகர முதல்வர் திரு ஆர்னோல்ட் தனது உரையில் “வரலாற்று சிறப்புமிக்க வடக்கின் பெரும் சமரிலிருந்து மூவர்  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம்பதிப்பதையிட்டு நான் மிகுந்த மகிழ்வடைகின்றேன். அதேவேளை அவர்களிற்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். இந்த மாவட்டத்தில் தரமான கிரிக்கெட் வீரர்களினை உருவாக்குவதற்கு பெரும் சமர்கள் மட்டும் போதாது. வருடம் முழுவதும் முறையான, தரமான பயிற்சிகளை வழங்கக்கூடிய கிரிக்கெட் பயிற்சி நிலையங்கள் விரைவாக நிறுவப்பட வேண்டும். ஏற்கனவே எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் இதுவரையிலும் எமக்கு வெற்றியளிக்கவில்லை” என தனது எதிர்பார்ப்பினை தெரிவித்தார். 

>> ஒரு மாதிரியாக நடைபெற்று முடிந்த LPL ஏலம் | Cricket Galatta Epi 42

அடுத்ததாக உரையாற்றிய யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு நிஷாந்தன் அவர்கள் தனது உரையில் “எங்களது பிரதேசத்தின் கிரிக்கெட் எதிர்காலத்தினை பற்றி சிந்திக்கையில், இந்த மூன்று வீரர்களிற்கும் கிடைத்திருக்கின்ற வாய்ப்பு மிகவும் முக்கியமானது. இது இவர்களை மாத்திரமன்றி ஏனையவர்களையும் கிரிக்கெட்டினை தொடர்ந்து ஆர்வமாக ஆடுவதற்கு ஊக்குவிக்கும்” என குறிப்பிட்டார்.   

தொடர்ந்து, தமது இன்றைய இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்த வீரர்கள், தங்களிற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்திற்கு தங்களினை இவ்வாறான கிரிக்கெட் வீரர்களாக உருவாக்குவதற்கு பக்கபலமாக  இருந்த பெற்றோர்கள், பயிற்றுவிப்பாளர், பாடசாலை சமூகம், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.  

யாழ்ப்பாணத்தில் புற்தரை ஆடுதளங்களினது அவசியம் குறித்தும், வடக்கிலிருக்கும் பாடசாலை அணிகளும் வீரர்களும் தேசிய மட்டத்தில் திறமையினை நிலைநாட்டுவதற்கும் முதற்தர கழகங்கள் மற்றும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கும், பிரிவு ஒன்று அல்லது இரண்டிற்காயினும் முன்னேற  வேண்டிய தேவை குறித்தும் குறிப்பிட்டனர்.  

>> LPL தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு

”முதற்தர கழகங்களில் விளையாடுவதற்கு தற்போது வாய்ப்புக்கள் கிடைக்கின்றபோதும் தங்கள்  முன்னிலையில் இங்கிருந்து சென்று சாதித்தவர்கள் இல்லை என்பது மனரீதியிலான பின்னடைவையே தருகின்றது. ஆனால், தங்களிற்கு கிடைத்திருக்க கூடிய இந்த சந்தர்ப்பமானது எதிர்கால வீரர்களிற்குரிய முன்னோடிகளினை உருவாக்கும்” என நம்பிக்கையையும் வெளியிட்டிருந்தனர். 

சொஹைப் மலிக், டேவிட் மாலன், ஆசிப் அலி, வனிந்து ஹசரங்க, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால் ஆகிய நட்சத்திர வீரர்களை உள்ளடக்கியிருக்கும் ஜப்னா ஸ்டலியன்ஸ் அணியின் தலைவராக திசார பெரேரா செயற்படவுள்ளதுடன், திலின கண்டம்பி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<