உலக பரா மெய்வல்லுனரில் இலங்கை வீரர் தினேஷுக்கு வெள்ளிப் பதக்கம்

0

டுபாயில் நடைபெற்றுவரும் உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கையின் நட்சத்திர பரா மெய்வல்லுனரான தினேஷ் பிரியந்த நேற்று (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் பிரயந்த ஹேரத், 2018 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

உலக ஆணழகன் போட்டியில் ராஜ்குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

டுபாயில் நடைபெற்ற உலக உடற்கட்டழகர்….

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமாகிய 9 ஆவது உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரானது, ஜப்பானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளது.

இதன்படி, டுபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக பரா மெய்வல்லுனரில் 118 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1400 பரா மெய்வல்லுனர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், இலங்கையிலிருந்து ஒன்பது வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், போட்டிகளின் நான்காவது நாளான நேற்று (10) நடைபெற்ற ஆண்களுக்கான எப்-46 பிரிவு ஈட்டி எறிதல் பங்குகொண்ட தினேஷ் ப்ரியந்த, 60.59 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இறுதியாக கடந்த வருடம் இந்துனேஷியாவில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டு விழாவில் 61.84 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ், 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற றியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தடவையாக வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதேநேரம், தினேஷுக்கு போட்டியின் இறுதிச் சுற்றுவரை பலத்த போட்டியைக் கொடுத்திருந்த இந்தியாவைச் சேர்ந்த குஜார் சுந்தர் சிங் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியில் 61.22 மீற்றர் தூரத்தை எறிந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்தவிடம் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மற்றுமாரு வீரரான அஜித் சிங், 59.46 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்

இதேவேளை, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ரி.47 நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனையான குமுது பிரியங்கா, 4.51 மற்றர் தூரத்தை பாய்ந்து தனது அதிசிறந்த தூரப் பெறுமதியுடன் 9 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<