கோமதியின் தங்கம் பறிமுதல்: இலங்கை வீராங்கனைக்கு பதக்கம்

702

கட்டாரின் தோஹாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டதுடன், அவரது தங்கப் பதக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது

>> 400 மீற்றர் உலக சம்பியனான சல்வா நாஸருக்கு இடைக் காலத்தடை

தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனைகளில் ஒருவரான 30 வயதுடைய கோமதி மாரிமுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். 

போட்டித் தூரத்தை அவர் 2 நிமிடங்கள் 2.70 செக்கன்களில் கடந்து முதல் இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தார்.  எனினும், அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தது கடந்த வருடம் மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது

இதனையடுத்து, மெய்வல்லுனர் ஒருமைப்பாடு பிரிவான ATHLETICS INTEGRITY UNIT கோமதி மாரிமுத்துவுக்கு 4 வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது

இதன்படி, எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி வரை கோமதி மாரிமுத்துவின் தடை அமுலில் இருக்கும். அதுவரை அவர் எந்தவொரு உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்க முடியாது.

>> SAG பதக்கம் வென்ற மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊக்கமருந்து குற்றச்சாட்டு

இந்நிலையில், நான்கு வருடங்கள் போட்டித் தடை குறித்து கோமதி மாரிமுத்து கருத்து தெரிவிக்கையில்,

”நான் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளேன். மாநில அரசு எனக்கு உதவ வேண்டும்

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை, நான் சாப்பிட்ட அசைவ உணவில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம். என்னிடம் இந்த விவகாரத்தை முன் கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் நான் இதிலிருந்து மீண்டிருப்பேன். அநாவசியமாக தோஹாவில் அவமானத்தைச் சந்திக்க நேர்ந்திருக்காது” என கூறினார்.

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சீனாவின் வேங் சுன்யூவுக்கு (2 நிமி. 02.96 செக்.) தங்கப் பதக்கமும், கஸகஸ்தானின் முகசேவா மர்கரிட்டாவுக்கு (2 நிமி. 03.83 செக்.) வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், போட்டியை 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது

>> SAG பதக்கத்துடன் சாதாரண தர பரீட்சையிலும் சித்தியடைந்த மாணவிகள் கௌரவிப்பு

கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக 15 வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பதக்கங்களை வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் தமது தனிப்பட்ட அடைவுமட்டத்தினைக் கூட எட்ட முடியாமல் தோல்விகளை சந்தித்தனர்

எனினும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட விதூஷா லக்ஷானி வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

எனவே, கயன்திகா அபேரத்னவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும் பட்சத்தில் பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<