இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும் மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட்  போட்டிகள் யாவும் முடிவுற்ற நிலையில், இன்றைய தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்குத் தெரிவான மேல் மாகாண தெற்கு அணி

மேல் மாகாணம் (தெற்கு) மற்றும் தென் மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவிந்து தீக்க்ஷன மற்றும் ஹன்சிக வெலிஹந்த ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் தென் மாகாண கனிஷ்ட அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டதை சுவீகரித்தது.

கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண தெற்கு அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

Photos : Southern P Vs Western P South – U19 Provincial Finals

அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அவ்வணி கடந்த அரையிறுதிப் போட்டியில் 300 இற்கும் மேலான ஓட்டங்களை குவித்திருந்த போதிலும், இந்தப் போட்டியில் எதிர்பாராத விதமாக 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது. கடந்த போட்டியில், சதம் பெற்று அணியை இறுதிப் போட்டிக்கு வழிநடத்தியிருந்த நிஷான் மதுஷ்க இம்முறை சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அந்த வகையில் சற்று நெருக்கடிக்கு மத்தியில் துடுப்பாடிய கமில் மிஷார 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அதேவேளை மறுமுனையில், கவிந்து உமயங்க 38 ஓட்டங்களை பங்களிப்புச் செய்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியிருந்தனர்.

தென் மாகாண அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அவிந்து தீக்க்ஷன 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மேல் மாகாண தெற்கு அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை இன்றைய தினம் ஆட்டமிழக்கச் செய்ததோடு எதிரணிக்கு பாரிய நெருக்கடியையும் கொடுத்திருந்தார்.

ரவிஷ்க விஜேசிறியின் அதிரடியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய தென் மாகாணம்

அதனையடுத்து, இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய தென் மாகாண அணியின், ஹன்சிக வெலிஹிந்த தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 58 ஓட்டங்களின் உதவியுடன் 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பதிவு செய்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும், ஆட்டத்துக்கு உகந்த காலநிலை காணப்படாமையினால் டக்வத் லூயிஸ் முறைப்படி தென் மாகாண கனிஷ்ட அணி 26 ஓட்டங்களால் வெற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் (தெற்கு) – 189 (49.1)  – கமில் மிஷார 68, கவிந்து உமயங்க 38, அவிந்து பெர்னாண்டோ 28, அவிந்து தீக்க்ஷன 5/41, தனஞ்சய லக்க்ஷான் 2/20, திசர டில்ஷான் 2/23

தென் மாகாணம் – 139/4 (34) – ஹன்சிக வெலிஹிந்த 58*, தவிஷ அபிஷேக் 28, இன்ஷாக மதுவிந்த 2/31

முடிவு – தென் மாகாணம் டக்வத் லூயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.