இளம் வீரர் சதீரவின் அதிரடி சதத்தால் கொழும்பை வீழ்த்திய காலி

772

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (08) நடைபெற்றன. இதில் கண்டி அணியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியைப் பெற்ற தம்புள்ளை போனஸ் புள்ளியுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதோடு காலி அணியிடம் தொடரில் முதல் தோல்வியை சந்தித்த கொழும்பு அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  

கண்டி எதிர் தம்புள்ளை

பந்துவீச்சில் அதிரடி காட்டிய தம்புள்ளை அணி கண்டி அணியை குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது. குசல் பெரேரா தலைமையிலான தம்புள்ளை அணி தனது முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில இம்முறை மாகாண மட்ட தொடரில் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கண்டி அணி ஆரம்பம் முதலே ஆட்டம் காண ஆரம்பித்தது. தம்புள்ளை அணியின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியதோடு அடுத்து வந்த வீரர்களும் சோபிக்கத் தவறினர்.

குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டு போட்டிகளுக்கு திரும்பி இருக்கும் இலங்கை ஒருநாள் அணித்தலைவரும் கண்டி அணித்தலைவருமான அஞ்செலோ மெதிவ்ஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மெதிவ்ஸ் தொடரின் முதலிரு போட்டிகளிலும் முறையே ஆட்டமிழக்காது 20 மற்றும் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

மெதிவ்ஸின் அணியை வீழ்த்திய திசர பெரேராவின் அணி

எனினும் மத்திய வரிசையில் வந்த சாமர கபுகெதர பெற்ற 40 ஓட்டங்கள் கண்டி அணி 100 ஓட்டங்களை தாண்ட உதவியது. பின் வரிசை வீரர் சச்சித் பதிரண இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாக 38 ஒட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் கண்டி அணி 29.1 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்போது தம்புள்ளை அணி சார்பில் சுழல் பந்துவீச்சாளர் ஜெப்ரி வென்டர்சே 4.1 ஓவர்களில் வெறுமனே 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ளை அணிக்கு அணித்தலைவர் குசல் பெரேரா ஆரம்பத்தில் அதிரடியாக ஓட்டங்கள் பெற்று அசத்தினார். 24 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 4 பௌண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 41 ஓட்டங்களை பெற்றதன் மூலம் அந்த அணியின் வெற்றி இன்னும் இலகுவானது.

குசல் பெரேரா ஆரம்ப விக்கெட்டுக்கு ருவிந்து குணசேகரவுடன் இணைந்து 50 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு குணசேகர 44 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றார். கனடா தேசிய அணிக்காக இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த குணசேகர இலங்கை உள்ளூர் போட்டிகளில் அண்மைக் காலமாக சோபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வரிசையில் மூன்று வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு தமது விக்கெட்டை பறிகொடுத்தபோதும் தம்புள்ளை அணி 18.5 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி ஒரு போனஸ் புள்ளியை மேலதிகமாகப் பெற்று மொத்தம் 5 புள்ளிகளோடு மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கண்டி அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.   

  

கொழும் எதிர் காலி

சதீர சமரவிக்ரம மற்றும் ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணியுடனான போட்டியில் உபுல் தரங்க தலைமையிலான காலி அணி 147 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு அணிக்கு அதன் தலைவரான தினேஷ் சந்திமால் களமிறங்கிய நிலையிலேயே அந்த அணி தொடரில் தனது முதல் தோல்வியை சந்தித்தது. முதலிரு போட்டிகளிலும் அந்த அணிக்கு திசர பெரேரா தலைவராக செயற்பட்டார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த உபுல் தரங்க 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சமரவிக்ரம மற்றும் ரம்புக்வெல்ல எதிரணியை திக்குமுக்காடச் செய்தனர்.

இருவரும் அதிரடியாக பந்துகளை விளாசி ஓட்டங்களை வேகமாக அதிகரித்தனர். இதன் மூலம் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். இதன்போது இலங்கை உள்ளூர் போட்டிகளில் அதிரடி துடுப்பாட்ட வீரராக பெயர் பெற்ற ரம்புக்வெல்ல 6 பௌண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 79 பந்துகளில் 87 ஓட்டங்களை குவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு 

மறுபுறம் இலங்கை A நிலை போட்டிகளில் தனது 2ஆவது சதத்தைப் பெற்ற 22 வயதுடைய சதீர சமரவிக்ரம 118 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 130 ஓட்டங்களை விளாசினார்.

காலி அணிக்காக கடைசி நேரத்தில் சதுரங்க டி சில்வா வேகமாக அரைச்சதம் ஒன்றை எடுத்தார். 35 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 57 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் காலி அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 347 ஓட்டங்களை எடுத்தது. எதிரணியை மட்டுப்படுத்த தடுமாறிய கொழும்பு அணி தனது எட்டு வீரர்களை பந்துவீச பயன்படுத்தியது. எனினும் சிறப்பு சுழல் பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இருவருமே முறையே 3, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணி 2 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தபோதும் அந்த அணிக்காக சோபித்து வரும் வீரர்களான ஷெஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு திரிமான்ன இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு நம்பிக்கை ஏற்படுத்தினர்.

இதில் கடந்த போட்டியில் அபார சதம் பெற்ற ஜயசூரிய 70 ஓட்டங்களையும் அதற்கு முந்திய போட்டியில் சதம் குவித்த திரிமான்ன 48 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தபின் கொழும்பு அணி நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்தது.

கொழும்பு அணியின் மத்திய வரிசை வீரர்கள் நின்றுபிடித்து ஆடவில்லை. அணித்தலைவர் சந்திமால் ஒரு ஓட்டத்தோடு வெளியேறியதோடு திசர பெரேராவால் 8 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் கொழும்பு அணி 42.4 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. காலி அணி சார்பில் சிறப்பு சுழல் பந்துவீச்சாளராக உள்ள மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த வெற்றியுடன் காலி அணி ஒரு போனஸ் புள்ளியுடன் மொத்தம் 9 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 8 புள்ளிகளுடன் கொழும்பு அணி இரண்டாவது இடத்திற்கு சரிந்தது.