NCC மற்றும் பதுரேலிய விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

பதுரேலிய விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தினை நிறைவு செய்திருந்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 2 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றிருந்த அவ்வணி இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.

நேற்று ஆட்டமிழக்காது களத்திலிருந்த நதீர நாவல மற்றும் சஹன் விஜேரத்ன இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 86 மற்றும் 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். நேற்றைய தினம் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஷெஹான் பெர்னாண்டோ 85 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்திருந்தார்.

இதன்படி பதுரேலிய அணி 85.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களை குவித்தது. பந்து வீச்சில் பிரகாசித்த NCC அணியின் தரிந்து கௌஷால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், சதுரங்க டி சில்வா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

145 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த NCC அணி, இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 202 ஓட்டங்களிற்கு 9 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையிலுள்ளது. முதல் இன்னிங்சை போன்றே அபாரமான பந்து வீச்சில் ஈடுபட்ட துவிந்து திலகரத்ன இந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

துடுப்பாட்டத்தில் NCC அணி சார்பாக பவன் விக்ரமசிங்க அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதன்படி NCC அணி 1 விக்கெட் கையிருப்பில் உள்ள நிலையில் 57 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ளது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 185 (44.4) – பவன் விக்ரமசிங்க 42, திமிர ஜயசிங்க 41, துவிந்து திலகரத்ன 6/78, அலங்கார அசங்க 3/41

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 330 (85.5) – நதீர நாவல 86, ஷெஹான் பெர்னாண்டோ 85, சஹன் விஜேரத்ன 79, தரிந்து கௌஷால் 5/86, சதுரங்க டி சில்வா 4/139

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 202/9 (45) – பவன் விக்ரமசிங்க 41, துவிந்து திலகரத்ன 5/68, அலங்கார அசங்க 2/65