நடைபெற்றுக்கொண்டிருக்கும், இலங்கை பிரிமியர் லீக் தொடரின் நேற்று ஆரம்பமாகிய போட்டி ஒன்றில், பொலிஸ் விளையாட்டு கழகம் தனது சுழல் பந்து வீச்சாளர் கல்யான ரத்னப்பிரியவின் அபார பந்து வீச்சின் துணையுடன் வெற்றிப்பாதையினை நெருங்கியுள்ளது. அதேபோன்று, ஏனைய போட்டிகளில் பாணதுறை விளையாட்டு கழகம், இலங்கை துறைமுக அதிகார சபை அணி ஆகியவை வலுப்பெற்றுள்ளன.

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

நேற்று(28) ஆரம்பமாகிய இப்போட்டியில், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தினை குறைவான ஓட்டங்களிற்கு மட்டுப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த பொலிஸ் விளையாட்டுக் கழக அணி, இன்று நடுத்தர வரிசை வீரரான மகேஷ் பிரியதர்ஷனவின் 42 ஓட்டங்களின் துணையுடன், சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 148 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பொலிஸ் அணியில் இன்று பறிபோன 8 விக்கெட்டுக்களையும் 48 ஓட்டங்களிற்கு தனியொருவராக வலது கை சுழல் பந்து வீச்சாளர் திலின ஹேரத் பதம்பார்த்தார்.

பின்னர், இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த குருநாகல் இளையோர் அணி, எதிரணியின் இடது கை சுழல் வீரர் கல்யாண ரத்னப்பிரியவின் சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சுருண்டு கொண்டது. அவ்வணி சார்பாக தனுஷ்க தர்மசிரி, அனுருத்த ராஜபக்ஷ ஆகிய இரு வீரர்கள் மாத்திரமே 30 ஓட்டங்களை தாண்டினர்.  

ஒரு சுழல் சூறவாளியினையே உருவாக்கியிருந்த கல்யாண ரத்னப்பிரிய வெறும் 13 ஓவர்களினை மாத்திரம் வீசி 36 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்டுக்களை பொலிஸ் அணிக்காக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், வெற்றி பெற 96 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த பொலிஸ் அணி, இன்றைய ஆட்ட நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டுள்ளது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 109 (40.5) ருவன்த ஏக்கநாயக்க 43, அனுருத்த ராஜபக்ஷ 24, சுவஞ்சி மதநாயக்க 20/3, சாருக்க விஜயலத் 30/3

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 148 (63.3) மஹேஷ் பிரியதர்ஷன 42, தினுஷ பெர்னாந்து 25, திலின ஹேரத் 48/8

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 134 (37) அனுருத்த ராஜபக்ஷ 31, தனுஷ்க தர்மசிரி 30, கல்யான ரத்னப்பிரிய 36/8

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 40/2(12) அகில லக்ஷன் 22*

போட்டியின் மூன்றாவது நாள் நாளை தொடரும்.


களுத்துறை நகரசபை கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

மக்கோன சர்ரேய் மைதானத்தில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்த இப்போட்டியில் சீரற்ற காலநிலை காரணமாக குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்தன.

அதனையடுத்து தொடர்ந்த இப்போட்டியில், ஆரம்ப வீரர்களின் உறுதியான இணைப்பாட்டத்தின் உதவியுடன் இன்றைய ஆட்ட நேர நிறைவில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி முதல் இன்னிங்சிற்காக 78 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களினை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இன்று சிறப்பாக செயற்பட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை அணியின் ஆரம்ப வீரர் யொஹன் டீ சில்வா 147 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பதோடு, இவருக்கு துணையாக நின்றிருந்த ஏனைய ஆரம்ப வீரர் ஹசான் குணதிலக அரைச்சத்துடன் 71 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டார். மறு முனையில் களுத்துறை நகர கழக அணியின் சுழல் வீரர் கீத் பெரேரா 4 விக்கெட்டுக்களை இன்று கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்): 156 (66.5) சுலான் ஜயவர்தன 38, யோகன் டி சில்வா(ரஷ்மிக்க) 21, சமிகர எதிரிசிங்க 40/4, ஒமேஷ் விஜயவர்தன 23/3

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 301/5 (78) யோகன் டி சில்வா 143*, ஹசான் குணதிலக்க 71, பிரஷான் விக்கிரமசிங்க 48, கீத் பெரேரா 82/4

போட்டியின் மூன்றாவது நாள் நாளை தொடரும்.


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

நேற்று ஆரம்பமான இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தினை இன்று தொடர்ந்த பாணதுறை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்சிற்காக 320 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இன்றைய போட்டியில் சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த பாணதுறை அணியின் நிசல் ரன்திக்க 94 ஓட்டங்களுடன் சதம் பெற தவறினார்.

இன்றைய நாளில் இலங்கை விமானப்படை அணி சார்பாக புத்திக சந்தருவன் 64 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை விமானப்படை தமது முதல் 6 விக்கெட்டுக்களையும் 46 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து தடுமாறியது. இருப்பினும் பின்வரிசை வீரர்களின் துணையுடன் 137 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காக அவ்வணி பெற்றுக்கொண்டது.

விமானப்படை அணி சார்பாக ரங்க திசாநயாக்க மாத்திரம் அதிகபட்சமாக 33 ஓட்டங்களினை பெற்றார். பாணதுறை கிரிக்கெட் கழகத்திற்காக கயான் சிரிசோம 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

குறைவான ஓட்டங்களைப் பெற்றமைக்காக மீண்டும் பலோவ் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட அவ்வணி, இரண்டாவது இன்னிங்சில்  19 ஓவர்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 61 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறைவுபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டு கழகம்(முதல் இன்னிங்ஸ்): 320 (76.3) நிசல் ரன்திக்க 94, மதவ்வ நிமேஷ் 58, மிஷன் சில்வா 44, புத்திக்க சந்தருவன் 64/4, லக்ஷன் பெர்னாந்து 56/2

இலங்கை விமானப்படை(முதல் இன்னிங்ஸ்): 137 (34.4) ரங்க திசநாயக்க 33, லக்சன் பெர்னாந்து 28, கயான் சிறிசோம 56/7

இலங்கை விமானப்படை f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 61/4(19) ரொஸ்கோ தட்டில் 27*, லசித் பெர்னாந்து 28/3

போட்டியின் மூன்றாவது நாள் நாளை தொடரும்