மதுஷிகாவின் அபாரத்தால் இலங்கை இளையோர் மகளிருக்கு முதல் வெற்றி

Asian Cricket Council Women's Emerging Teams Cup 2023

149

வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் A அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிராக திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆசியக் கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8 அணிகளுக்கு இடையிலான வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (12) ஹொங் கொங்கில் ஆரம்பமாகியது.

ஹொங் கொங்கின் மொங் கொக்கில் உள்ள Mission Road மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை மகளிர் A அணி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி அவ்வணிக்காக தீர்தா சதிஷ் மற்றும் ஈஷா ஒஸா ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியதுடன், முதல் விக்கெட்டுக்காக 23 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதில் தீர்தா சதிஷ் 16 ஓட்டங்களுடனும், ஈஸா ஒஸா 39 ஓட்டங்களுடனும், ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த குஷி சர்மா மாத்திரம் 14 ஓட்டங்களை பெற்றாலும் பின்வரிசை வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர். இதனால் ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை மகளிர் A அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த மதுஷிகா மெத்தானந்த 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மல்ஷா ஷெஹானி மற்றும் நிமேஷா மீபகே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 96 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரட்ன – உமாஷா திமேஷனி ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமறிங்கினர். இதில் உமாஷா 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கௌஷனி நுத்யங்கனா 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷ்மி குணரட்ன 21 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், தொடர்ந்து வந்த இமேஷா துலானி (15 ஓட்டங்கள்), நிலக்ஷனா சந்தமினி (12 ஓட்டங்கள்) மற்றும் மதுஷிகா மெத்தானந்த (11 ஓட்டங்கள்) ஆகியோரது பங்களிப்புடன் ஒரு பந்து மீதமிருக்க இலங்கை மகளிர் A அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணியை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணியின் பந்துவீச்சில் ஈஷா ஒஸா மற்றும் இந்துஜா நந்தகுமார் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இலங்கை அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த மதுஷிகா மெத்தானந்த போட்டியின் ஆட்டநாயகி விருதை தட்டிச் சென்றார்.

இதனிடையே, இலங்கை மகளிர் A அணி தமது 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் மகளிர் A  அணியை எதிர்வரும் 14ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<