பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கை சாதனையை முறியடித்தார் சாரங்கி

215

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் இலங்கை வீராங்கனை சாரங்கி டி சில்வா, பெண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய இலங்கை சாதனை படைத்தார். 

இதேநேரம் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிரேஷன் தனன்ஜய தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லின் செஷ்மி ஓர் ஞாபகார்த்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் (Cezmi Or Memorial Athletic Championship)) நேற்று நடைபெற்றது.

உலக தரவரிசையில் 46ஆவது இடத்தைப் பிடித்த யுபுன் அபேகோன்

இதில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட சாரங்கி டி சில்வா, 6.44 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 

இதன்மூலம் 2015இல் என்.சி.டி பிரியதர்ஷனி 6.43 மீட்டர் தூரம் பாய்ந்து நிலைநாட்டிய சாதனையை 6 வருடங்களுக்குப் பிறகு சாரங்கி டி சில்வா முறியடித்துள்ளார்.

இறுதியாக, கடந்த 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 6.38 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்ற சாரங்கி, 2020இல் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 6.33 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, செஷ்மி ஓர் ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிரேஷன் தனன்ஜய, 7.78 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை மெய்வல்லுனர் அணி

நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான இவர், இறுதியாக நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். 

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் அனுசரணையில் கடந்த ஒரு மாதங்களாக குறித்த இரண்டு வீரர்களும் கத்தாரில் விசேட பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு இவ்வாறு முதல்தடவையாக சர்வதேச மெய்வல்லுனர் தொடரொன்றில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…