இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அணிகள் பங்குபற்றியிருந்த ஒரு நாள் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டியில் கேகாலை மாவட்ட அணியினை 72 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்த கொழும்பு மாவட்ட அணி, இன்றைய அவ்வெற்றியின் மூலம் 2016/17 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் தொடர் சம்பியனாக தனது நாமத்தை பதித்துக்கொண்டது.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் கண்டி மாவட்டத்தினை வீழ்த்தியிருந்த கேகாலை மாவட்ட அணி, மன்னார் மாவட்டத்திற்கு அதிர்ச்சியளித்திருந்த கொழும்பு மாவட்டத்துடன் மோதிய இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியானது முன்னதாக, P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த கேகாலை மாவட்ட அணியின் தலைவர் அஞ்சன ஜயரத்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கொழும்பு மாவட்ட அணிக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, தேசிய அணி வீரர்கள் பலரை உள்ளடக்கியிருந்த கொழும்பு மாவட்டம் தமது துடுப்பாட்டத்தினை மலிந்து மதுரங்க மற்றும் தில்ஷான் முனவீர ஆகியோருடன் ஆரம்பித்தது.

ஆரம்பம் முதல் பந்துகளை பவுண்டரி எல்லைகளை நோக்கி பதம் பார்க்க தொடங்கிய தில்ஷான் முனவீர அதிரடி ஆரம்பம் ஒன்றினை அணிக்கு வழங்கியிருந்தார்.

கொழும்பு மாவட்ட அணி 62 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது முதல் விக்கெட்டாக பறிபோயிருந்த தில்ஷான் முனவீர வெறும் 39 பந்துகளினை மாத்திரம் சந்தித்து 10 பவுண்டரிகளினை பொறிதெறிக்கும் விதமாக விளாசி 47 ஓட்டங்களுடன் அரைச்சதம் பெறத் தவறியிருந்தார்.

இதனையடுத்து சீரான இடைவெளியில் தமது இரண்டாம் விக்கெட்டினை பறிகொடுத்த கொழும்பு மாவட்ட அணி, மூன்றாம் விக்கெட்டிற்காக பெறப்பட்ட சிறந்த இணைப்பாட்டத்துடன் (121) முடிவில், 50 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 295 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.

இதில் கொழும்பு மாவட்ட அணியின் தலைவரான அஷான் பிரியஞ்சன் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி சதம் கடந்ததுடன் மொத்தமாக, 98 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 107 ஓட்டங்களினை பெற்றார். அத்துடன் மலிந்து மதுரங்க 41 ஓட்டங்களினையும் குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களினையும் சேர்த்து அணியினை வலுப்படுத்தியிருந்தனர்.

சற்று மோசமான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த கேகாலை மாவட்ட அணியில், சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஞய 3 விக்கெட்டுகளையும் நிசல தாரக்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து சற்று சவாலான வெற்றி இலக்கான 296 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கேகாலை மாவட்ட அணி சரியான முறையில் தமது இலக்கை தொடும் பயணத்தினை தொடங்கியிருந்தது. இருப்பினும் கொழும்பு மாவட்ட அணியின் லஹிரு மதுசங்க போட்டியின் ஆரம்பத்தில் கைப்பற்றிய முதல் இரண்டு விரைவான விக்கெட்டுகள் காரணமாக சற்று தடுமாறியது.

இதனையடுத்து தேசிய அணி வீரர் சசித் பத்திரனவின் ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டினை பறிகொடுத்த கேகாலை மாவட்ட அணி,  ஒரு கட்டத்தில் 54 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையொன்றினை நோக்கி நகர்ந்திருந்தது.

எனினும், நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரந்திக டி சில்வா மற்றும் அஞ்சலோ ஜயசிங்க ஆகியோர் எதிரணியின் பந்துகளை தடுத்தாடியதோடு, வலுவான இணைப்பாட்டம் ஒன்றினையும் பெற்று வெற்றி இலக்கினை நெருங்கியிருந்தனர்.

இந்நிலையில் பந்தினை பெற்றுக்கொண்ட இடது கை சுழல் பந்து வீச்சாளரான லக்‌ஷான் சந்தகன் பலமான இந்த இணைப்பாட்டத்தினை தகர்த்தார்.

இதனால், நான்காம் விக்கெட்டின் இணைப்பாட்டம் 121 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டதுடன் 4 ஆவது விக்கெட்டாக விஷாட் ரந்திக 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

இதனையடுத்து சொற்ப நேரத்தில் அஞ்சலோ ஜயசிங்கவையும் ஆட்டமிழக்கச் செய்த லக்‌ஷான் சந்தகன், மேலும் தனது சாமர்த்தியமான சுழல் பந்து வீச்சின் மூலம் குறுகிய ஓட்ட இடைவெளிக்குள் கேகாலை மாவட்ட அணியின் ஏனைய வீரர்களையும் சாய்க்க முடிவில் கேகாலை மாவட்ட அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 72 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

கேகாலை மாவட்ட அணியின் துடுப்பாட்டத்தில அஞ்சலோ ஜயசிங்க 3 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும் விஷாட் ரந்திக 60  ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

கொழும்பு மாவட்ட அணியின் பந்து வீச்சில், அவ்வணியை சம்பியன் ஆக்குவதற்கு பெரும் பங்காற்றியிருந்த லக்‌ஷான் சந்தகன் வெறும் 39 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததோடு, சசித் பத்திரன மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு மாவட்டம் – 295/6 (50) –  அஷான் பிரியஞ்சன் 107(98), தில்ஷான் முனவீர 47(39), மலிந்து மதுரங்க 41(51), குசல் மெண்டிஸ் 34(49), மாதவ வர்னபுர 23(46), அகில தனன்ஞய 75/3 (10), நிசல தாரக 61/2 (8), அலி கான் 21/1 (4)

கேகாலை மாவட்டம் – 223 (47.4)அஞ்சலோ ஜயசிங்க 67 (87), ரந்திக டி சில்வா 60 (86), பசிந்து லக்ஷங்க 28 (28), லக்ஷான் சந்தகன் 39/5 (10), சசித் பத்திரன 46/2 (10), லஹிரு மதுசன்க 22/2 (3), அஷான் பிரியஞ்சன் 26/1 (7.4)

போட்டி முடிவு கொழும்பு மாவட்டம் 72 ஓட்டங்களால் வெற்றி