ஆஸி மண்ணில் அவர்களை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

205

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியான தீர்மானம் மிக்க மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று (18) மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

தீர்க்கமான போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த கோஹ்லி, டோனி

விராட் கோஹ்லியின் சதம் மற்றும் MS டோனியின் அரைச்சதத்தின் உதவியோடு அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது…

நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியிருந்த நிலையில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் தொடரை வெற்றி கொள்ளும் நோக்கில் களமிறங்கியிருந்தன.  

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார். இந்திய அணி சார்பாக இன்றைய தினம் விஜய் சன்கர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்ததுடன் இரு அணிகளும் சில மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவறியமை மற்றும் மத்திய வரிசை வீரர்களும் கடந்த போட்டிகளை போல் இல்லாமல் இப்போட்டியில் கண்ட தடுமாற்றம் என்பன அவுஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கொன்றை நிர்ணயிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை.  

அவுஸ்திரேலிய அணி தமது இன்னிங்ஸிற்காக 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அவ்வணி சார்பாக பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் அதிகபட்சமாக அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

கடந்த இரு போட்டிகளிலும் விளையாடிய குல்தீப் யாதவிற்குப் பதிலாக இன்றைய தினம் இந்திய அணிக்கு உள்வாங்கப்பட்டிருந்த யுஸ்வேந்திர சஹால் தனது வாழ்நாளின் சிறந்த பந்து வீச்சு பிரதியை இன்றைய தினம் பதிவு செய்திருந்தார். 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர்  போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தை அறிவித்த நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில்…

ஏற்கனவே, நடைபெற்று முடிந்த டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததுடன் டெஸ்ட் தொடரை வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் வெற்றி கொள்ளும் எதிர்பார்ப்போடு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் ஷர்மா (9) மற்றும் ஷிகர் தவான்(23) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பின்னர் கோஹ்லியுடன் இணைந்த டோனி மூன்றாவது விக்கெட்டுக்காக 54 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கோஹ்லி 4 ஓட்டங்களால் அரைச்சதம் பெறும் வாய்ப்பை தவற விட்டு 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் மற்றும் டேனி ஜோடியின் நான்காவது விக்கெட்டுக்கான பிரிக்கப்படாத 121 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் இந்திய அணி 49.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.  

ஆட்டமிழக்காமல் கடைசிவரை அணியின் வெற்றியை உறுதி செய்த டோனி 87 ஓட்டங்களையும் கேதர் ஜாதவ் 61 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைச்சதம் கடந்து மொத்தமாக 193 ஓட்டங்கள் பெற்ற இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 230 (48.4) – ஹேன்ஸ்கோம்ப் 58, ஷோன் மார்ஷ் 39, சஹால் 42/6, புவனேஷ்வர் குமார் 28/2, மொஹமட் ஷமி 47/2

இந்தியா – 234/3 (49.2) – டோனி 87*,   கேதர் ஜாதவ் 61*, ஜேய் ரிச்சட்சன் 27/1

முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<