பலமான ஆஸி. அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை?

Australia tour of Sri Lanka 2022

822
 

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான T20I தொடரில் மோதுவதற்கு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தயாராகிவருகின்றன.

இலங்கை மக்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இந்த தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை தவிர்த்து, இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொடரை சிறப்பாக நிறைவுசெய்யவேண்டும் என காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த முதல் இரு T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்!

காரணம் இந்த தொடர் நல்ல முறையில் நடைபெற்றுமுடிந்தால் அடுத்துவரும் ஆசியக் கிண்ணம் போன்ற சர்வதேச தொடர்களை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைக்கும். எனவே, இலங்கை கிரிக்கெட்டுக்கு இதுவொரு மிக முக்கியமான தொடராகும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் இவ்வாறு இருந்தாலும், மறுபக்கம் தொடரில் தங்களுடைய வெற்றியை உறுதிசெய்வதற்கு கடுமையான பயிற்சிகளை இரண்டு அணிகளும் மேற்கொண்டுவருகின்றன. T20I உலகக்கிண்ண சம்பியனான அவுஸ்திரேலிய அணி பலம் மிக்க குழாமாக இலங்கை வந்துள்ளனர்.

ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் உலகக்கிண்ண அணியில் விளையாடிய பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷாம்பா ஆகியோர் மாத்திரமே இணைக்கப்படவில்லை. எனவே, உலகக்கிண்ண சம்பியனுக்கு எதிராக தங்களுடைய வியூகத்தை அமைத்து வெற்றிபெற காத்திருக்கிறது இலங்கை.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 4-1 என வெற்றிபெற்றிருந்தது. அவுஸ்திரேலியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் இலங்கை அணி எதிர்கொண்டு ஒரு வெற்றியை பெற்றமை மாத்திரமின்றி, இரண்டாவது T20I போட்டியில் சுபர் ஓவரில் தோல்வியடைந்திருந்தது.

அவுஸ்திரேலிய தொடரை பொருத்தவரை இலங்கை அணி எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் விளயைாடியிருந்தது. எனினும், இதற்கு அடுத்ததாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரை 3-0 என இழந்து நாடு திரும்பியிருந்தது. அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை இலங்கை தொடரையடுத்து, பாகிஸ்தானை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த தொடருக்கு தயாராகியுள்ளனர்.

IPL தொடர் காரணமாக இரண்டு அணிகளும் கடந்த இரண்டு மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களில் விளையாடவில்லை. இந்த இடைவெளியானது அவுஸ்திரேலிய அணியைவிட இலங்கை அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இம்முறை IPL தொடரில் 6 இலங்கை வீரர்கள் விளையாடியிருந்தனர். இவர்கள் அனைவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் 5 வீரர்கள் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கியிருந்தமை அணியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இலங்கை T20I அணியில் துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் மற்றும் நுவான் துஷார, மதீஷ பதிரண போன்ற வீரர்களின் வருகை இலங்கை அணியின் பந்துவீச்சை பலமானதாக மாற்றியுள்ளதோடு, துடுப்பாட்ட வரிசை பிரகாசித்தால் இலங்கை அணிக்கு தொடரில் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

கடந்தகால மோதல்கள்

நாம் மேலே குறிப்பிடத்தை போன்று இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடைசி தொடரில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தாலும், இலங்கை அணி சிறந்த போட்டியை கொடுத்திருந்தது.

இரண்டு அணிகளது ஆரம்ப T20I போட்டிகளை பொருத்தவரை இலங்கை அணி ஆதிக்கத்தை காட்டியிருந்தது. இரண்டு அணிகளும் மோதிய முதல் 10 T20I போட்டிகளில் இலங்கை அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது.

எனினும், அண்மைக்காலங்களை பொருத்தவரை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடிய  12 போட்டிகளில் 3 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளமை அணிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், இலங்கையில் வைத்து 3 T20I போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரு வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. இறுதியாக 2016ம் ஆண்டு பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் கிளேன் மெக்ஸ்வேல் 145 ஓட்டங்களை விளாச, 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தது. எனவே, இதுவொரு எதிர்பார்ப்புமிக்க தொடராக மாறியுள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

பெதும் நிஸ்ஸங்க

இலங்கை அணியில் விளையாடும் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க நடைபெற்றுமுடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறந்த பிரகாசிப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

குறிப்பாக இரண்டாவது T20I போட்டியில் அரைச்சதம் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றதுடன், ஏனைய போட்டிகளில் ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்தார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு அரைச்சதம் அடங்கலாக 191 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

தற்போதைய இலங்கை குழாத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை பெற்ற வீரராகவும் பெதும் நிஸ்ஸங்க உள்ளார். எனவே, இந்த தொடரில் பெதும் நிஸ்ஸங்கவின் ஆரம்ப துடுப்பாட்டம் அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளேன் மெக்ஸ்வேல்

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர சகலதுறை வீரராக ஜொலித்து வருபவர் கிளேன் மெக்ஸ்வேல். இறுதியாக இலங்கையில் நடைபெற்ற T20I போட்டியில் வெறும் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

எனவே, எந்தவொரு தருணத்திலும் எதிரணியிடமிருந்து, போட்டியின் வெற்றியை தம்வசப்படுத்திக்கொள்ளக்கூடியவர். வேகமாக ஓட்டங்களை குவிப்பது மாத்திரமின்றி, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியவர்.  இலங்கை அணிக்கு எதிராக 10 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள இவர் ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதம் அடங்கலாக 60.57 என்ற சராசரியில் 424 ஓட்டங்களை குவித்துள்ளார்.

துடுப்பாட்டத்தில் மாத்திரமின்றி எதிரணிக்கு சுழல் பந்துவீச்சிலும் மெக்ஸ்வேல் தடுமாற்றம் தரக்கூடியவர். ஓட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஓவர்களை வீசி முக்கியமான விக்கெட்டுகளையும் கைப்பற்றும் திறனையும் கொண்டுள்ளார். அதனால், இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய துறுப்புசீட்டாக மெக்ஸ்வேல் இருப்பார்.

அணிக்குழாம்கள்

இலங்கை குழாம் T20I – தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு மதுசங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, நுவான் துஷார, மதீஷ பதிரண, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, லக்ஷான் சந்தகன்

  • மேலதிக வீரர்கள் – நிரோஷன் டிக்வெல்ல, ஜெப்ரி வெண்டர்சே

அவுஸ்திரேலியா குழாம் – ஆரோன் பின்ச் (தலைவர்), ஷோன் எப்போட், அஷ்டன் ஏகார், ஜோஸ் ஹேசல்வூட், ஜோஸ் இங்கிலீஷ், மிச்சல் மார்ஸ், கிளன் மெக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர், மெதிவ் வேட்

மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை (07)  கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் பொருளாதார நெருக்கடியைத்தாண்டி முக்கிய தொடராக அமையவுள்ளது.

குறிப்பாக T20I உலகக்கிண்ணம் இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அணி தங்களுடைய அணியை பலப்படுத்திக்கொள்வதற்கும், சரியான குழாத்தை கண்டறிவதற்கும் முக்கியமாக அமையும்.

அதுமாத்திரமின்றி தங்களுடைய சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை மக்களின் முகத்தில் புன்னகையைத்தரக்கூடிய தொடராக இந்த தொடர் அமையவேண்டும் என்ற விடயத்திலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தீர்க்கமாக உள்ளனர். எனவே, இந்த தொடரில் பலமான அவுஸ்திரேலிய அணி வெற்றியை தக்கவைக்குமா? அல்லது பெரும் எதிர்பார்ப்புடன் கடின உழைப்பை மேற்கொண்டுவரும் இலங்கை அணிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொருத்திருந்து பார்க்கவெண்டும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<