இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இம்மாதம் 31ஆம் திகதி

139

தேர்தல் குழுவை நியமிப்பதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக இம்மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இம்மாதம் 31 ஆம் திகதி நடத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (19) இடம்பெற்ற விசேட பொதுச்சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பைஸர்

இதனடிப்படையில் நிர்வாக சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட குழுவில் ரசிக வீரதுங்க, சரத் உத்பல, புத்திக இலங்காதிலக, ஜுட் பெரேரா மற்றும் தேவகிரி பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக தேர்தல் குழுவை நியமிக்கும் செயற்பாடு புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெறாத காரணத்தால் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இம்மாதம் 19 ஆம் திகதி விசேட பொதுச்சபைக் கூட்டத்தை நடத்தி தேர்தல் குழுவை நியமிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தார்.

அதற்கமைய, இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், “விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடன் இன்று (19) நடைபெறவிருந்த தேர்தலை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேநேரம், தேர்தலுக்கான ஐவரடங்கிய குழுவொன்றையும் நாங்கள் நியமித்துள்ளோம்.

இதில் ரசிக வீரதுங்க மற்றும் புத்திக இலங்காதிலக ஆகியோர் வழக்கறிஞர்களாவர். அதேபோன்று சரத் உத்பல, இலங்கை கடற்படை அதிகாரியாகவும், ஜுட் பெரோ, கணக்காய்வாளர் திணைக்களத்தின் உறுப்பினராகவும், தேவகிரி பண்டார, நம்பிக்கை நிதியத்தின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றனர். எனவே பொதுச் சபையில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான முடிவுக்கு அமையவே நாம் இந்தக் குழுவை நியமித்துள்ளோம். இங்கு வந்த எவரும் அதற்கு எதிர்ப்பினை வெளியிடவில்லை. இவர்களைத் தான் நாம் இதற்கு முன்னரும் தெரிவு செய்து எமது உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தோம். ஆனால் இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அவர்களையே மீண்டும் தெரிவு செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை வரலாற்றில் மிகப்பெரிய இலாப பதிவு

இதேநேரம், தேர்தலுக்கான ஆயத்தம் குறித்து அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், ”எமது செயலாளரைத் தவிர மற்றைய அனைவரும் அதே பதவிகளுக்கான மீண்டும் போட்டியிடவுள்ளனர். இதற்கான வேட்பு மனுக்களை நாம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டோம். ஆனால் எம்மை எதிர்த்து போட்டியிடவுள்ள எதிர் தரப்பினர் யார் என்பது தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அதனை மறுபடியும் வேட்பு மனு கோரிய பிறகு அறிந்து கொள்ள முடியும். எனினும் யார் போட்டியிட்டாலும் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் எமது அணிதான் வெற்றிபெறும்” என உறுதியாகத் தெரிவித்தார்.

எனவே, இம்முறைத் தேர்தலில் 84 கழகங்களைச் சேர்ந்த 143 பேருக்கு வாக்களிப்பதற்கு முடியும் என்பதுடன், மூன்று கிரிக்கெட் கழகங்களுக்கு சட்ட சிக்கல்கள் காரணமாக தேர்தலில் வாக்களிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை தேர்தலுக்காக மும்முனைப் போட்டி நிலவும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இதில் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தரப்பினர் தேர்தலுக்காக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.

எனினும், தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள 3 ஆவது நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜயந்த தர்மதாச இத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணி

இதேநேரம், இம்மாதம் நடைபெறவுள்ள நிர்வாக சபைத் தேர்தல் காரணமாக ஆகஸ்ட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்குப் பாதிப்பு ஏற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திலங்க சுமதிபால கருத்து வெளியிகையில்,

”தேர்தல் காரணமாக எமக்கு பல வேலைகள் உள்ளன. ஆனால் அது லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கு ஓரு போதும் தடையாக இருக்காது. ஏனெனில் குறித்த போட்டித் தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றோம். எனவே 6 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் உரிய தினத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க