சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியது.

பங்களாதேஷ் அணி விளையாடும் 100 ஆவது இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியினை கடந்த டெஸ்ட் போட்டி போன்று இப் போட்டியிலும் தமதாக்கி கொண்ட இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் இம்முறை துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாயிருந்த காரணத்தினாலும், இலங்கை அணி முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர் ஒருவருடன் மாத்திரமே இப்போட்டியில் களமிறங்குவதும் ரங்கன ஹேரத்தின் நாணய சுழற்சி முடிவுகளிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த போட்டியில், தமது சுழல் குழாமினை மாத்திரம் வைத்து இலங்கை பங்களாதேசுக்கு அழுத்தம் தந்த காரணத்தினால் இலங்கை அணியில் இப்போட்டிக்காக, துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதோடு வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிப்பதால், இத் தொடரினை சமநிலைப்படுத்தும் நோக்கில் பங்களாதேஷ் குழாமில் நான்கு வீரர்கள் மாற்றப்பட்டிருந்தனர்.

மொமினுல் ஹக், லிடொன் தாஸ் (காயம்), தஸ்கின் அஹமட் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டதோடு அவர்களிற்கு பதிலாக விருந்தினர் அணி இம்ருல் கைஸ், சப்பீர் ரஹ்மான், தய்ஜூல் இஸ்லாம் மற்றும் புதுமுக வீரர் மொசாதீக் ஹூசைன் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது.

இதனையடுத்து, நாணய சுழற்சி முடிவுகளிற்கு அமைவாக திமுத் கருணாரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோருடன், துடுப்பாட மைதானம் விரைந்த இலங்கை அணி மெதுவான ஆரம்பத்தினையே தந்தது.

போட்டியின் ஆரம்பத்தில், 7 ஓட்டங்களினை மாத்திரம் குவித்திருந்த கருணாரத்ன இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோய் ஏமாற்றத்தினை தந்தார். இதனால், துல்லியமான வேகப்பந்து ஒன்றினை வீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இலங்கையின் ஆரம்ப வீரர்களில் ஒருவரை வீழ்த்தி பங்களாதேஷ் அணிக்கு நல்ல ஆரம்பத்தினைப் பெற்றுத்தந்தார்.

பின்னர் இலங்கை அணி, களத்திற்கு வந்த குசல் மெண்டிசுடன் போட்டியின் ஆதிக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பந்தினை கையில் எடுத்த மெஹதி ஹஸன் தந்திரமான பந்து வீச்சு ஒன்றின் மூலம் இன்றைய போட்டியில் விக்கெட் காப்பாளர் பொறுப்பினை எடுத்துக்கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் ஸட்ம்பின் மூலம் கடந்த போட்டியின் ஆட்ட நாயகனை வெறும் 5 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்  

இதனை அடுத்து, சிறிது நேரத்தில் இலங்கை அணியின் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவும் இலங்கை அணி 30 ஓட்டங்களை எட்டிய வேளையில், மீண்டும் திறமையினை வெளிக்காட்டிய  மெஹதி ஹஸன் மூலம் வீழ்த்தப்பட கடந்த போட்டியின் வெற்றிக்கு காரணமாய் இருந்த முக்கிய வீரர்கள் இருவரினையும் பறிகொடுத்த இலங்கை அணி தடுமாற்றத்தினை சந்தித்தது.

இதனை அடுத்து, களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் கவனமான முறையில் அணிக்காக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர்.

இவர்கள் இருவரினது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணிக்கு ஒரு சிறந்த அத்திவாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், வலது கை வேகப்பந்து வீச்சாளர் சுபாசிஸ் ரோய் அசேல குணரத்னவை ஆட்டமிழக்கச் செய்து அந்த எதிர்பார்ப்பையும் தகர்த்தார்.

இதனால், கடந்த போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்த அசேல குணரத்தன இம்முறை வெறும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டுடன் இரு அணி வீரர்களும் பகல் போசண இடைவேளையை எடுத்துக் கொண்டனர்.

பின்பு தினேஷ் சந்திமாலுடன், கூட்டு சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் இலங்கையின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் பெறுமதி சேர்க்கும் விதமாக, தலா 34 ஓட்டங்களினை பெற்று தந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை தேநீர் இடைவைளையை அடுத்து 150 ஓட்டங்களை தாண்ட வைத்தனர்.

இவர்கள் இருவரும், பங்களாதேஷின் இடது கை சுழல் பந்து வீச்சாளர்களான தய்ஜூல் இஸ்லாம் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோரால் முறையே வீழ்த்தப்பட, களம் நுழைந்த தில்ருவான் பெரேரா, சிக்ஸர் ஒன்றினை விளாசி இலங்கை சார்பாக சிக்ஸர்கள் இப்போட்டியில் அடிக்கப்படாத குறையினை நிவர்த்தி செய்து 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரின் விக்கெட்டுடன், 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, நீண்ட நேர இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமாலின் துணையுடன், 200 ஓட்டங்களை கடந்தது. இதனை அடுத்து, போட்டியினை நடாத்த போதிய வெளிச்சம் இன்றி காணப்பட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு போட்டியின் இன்றைய ஆட்ட நாளும் நிறைவுற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

போட்டியின் இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது, இலங்கை அணி 83.1 ஓவர்களிற்கு 7 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

களத்தில், அணிக்காக இன்று போராடிய தினேஷ் சந்திமால் 4 பவுண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ரங்கன ஹேரத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹதி ஹஸன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியுள்ளனர்.

SL 1st Inn

போட்டியின் இரண்டாம் நாளை தொடரும்