இலங்கை ஒரு நாள் குழாத்திலிருந்து அமில அபொன்சோ, லஹிறு மதுசங்க நீக்கம்

1482
Madushanka and Aponso dropped

இன்றைய நாளில் முன்னதாக தமது பதவிக் காலத்தில் நீடிப்பினைப் பெற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள், ஜிம்பாப்வே அணியுடனான எஞ்சியுள்ள மூன்று ஒரு நாள் போட்டிகளுக்குமான இலங்கை குழாத்தினை அறிவித்துள்ளனர்.

ஜிம்பாப்வேயுடனான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிற்கும் அணியில்  இணைக்கப்பட்டிருந்த சகல துறை ஆட்டக்காரரான லஹிறு மதுசங்க மற்றும் இடது கை சுழல் வீரரான அமில அபொன்சோ ஆகியோர் இன்று வெளியிடப்பட்டுள்ள அடுத்த மூன்று போட்டிகளுக்குமான இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விளையாட்டு அமைச்சரின் பணிப்புரை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய…

சகலதுறை வீரரான லஹிறு மதுசங்க ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில், ஒரு பந்தினை மாத்திரம் எதிர்கொண்டிருந்ததோடு, அதிகளவிலான ஓட்டங்களை எதிரணிக்கு வாரி வழங்கும் விதத்தில் இரண்டு ஓவர்களையும் வீசியிருந்தார்.

அதே போன்று, அமில அபொன்சோவும் 8.4 ஓவர்களில் 77 ஓட்டங்களினை வழங்கியிருந்தார். இதன் காரணமாக, இந்த இரண்டு வீரர்களும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.  

தற்பொழுது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள இவர்களுக்குப் பதிலாக, சுரங்க லக்மால் மற்றும் சாமர கபுகெதர ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு வீரர்களும், காலியில் இடம்பெற்றிருந்த இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன்னர் குசல் மெண்டிஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்தும் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வீரர்களான மாலிங்க, மெண்டிஸ், குனரத்ன மற்றும் சந்தகன் ஆகியோர் தற்போது பூரண சுகத்தினைப் பெற்று மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான பயிற்சிகளில் கலந்துகொண்டிருந்ததாக எமக்கு அறியக்கிடைக்கின்றது.

எஞ்சிய மூன்று போட்டிகளுக்குமான இலங்கை அணிக் குழாம்

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), அசேல குணரத்ன, வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, லக்ஷன் சந்தகன், லசித் மாலிங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், அகில தனன்ஞய, சாமர கபுகெதர

 >> மேலும் பல செய்திகளைப் படிக்க <<