ஒரு நாள் தொடரை தக்கவைத்த இலங்கை இளையோர் அணி

257

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று வரும் இளையோர் ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் காலநிலை சீர்கேடு காரணமாக இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி டக்வத் லூவிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி தமது சுற்றுப் பயணத்தின் முதல் அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் விளையாடியதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரில் மீண்டும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் ஆடி வருகின்றது.

பங்களாதேஷ் இளையோர் அணியிடம் தோல்வியுற்ற இலங்கை இளையோர் அணி

இந்த இளையோர் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட, கடந்த வியாழன் (1) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் டக்வத் லூவிஸ் முறையில் வெற்றி பெற்று இளையோர் ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலை அடைய இன்று (3) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இளையோர் ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளையோர் அணித்தலைவர் நிப்புன் தனன்ஞய முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் இளையோர் அணிக்கு வழங்கினார். அந்தவகையில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி 26.4 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு உருவானது. தொடர்ந்து நிலைமைகள் சீராகாத காரணத்தினால் பங்களாதேஷ் இளம் அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் முடிவடைந்ததாக கள நடுவர்கள் அறிவித்தனர்.

இதன் போது பங்களாதேஷ் சார்பான அணியின் துடுப்பாட்டத்தில் தன்ஷித் ஹசன் 38 ஓட்டங்களையும், அவ்வணியின் அணித்தலைவர் தவ்ஹீத் ரித்தோய் 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். மறுமுனையில் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி சார்பாக லக்ஷான் கமகே 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து காலநிலை சீர்கேடு காரணமாக போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை இளையோர் அணிக்கு டக்வத் லூவிஸ் முறைப்படி 25 ஓவர்களில் 160 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக துடுப்பாடிய இலங்கையின் இளம் வீரர்கள் வெறும் 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களுடன் இலக்கினை அடைந்தனர்.

இலங்கை இளம் அணியின் வெற்றிக்கு அதிரடியான முறையில் உதவிய நவோத் பராணவிதான அரைச்சதம் தாண்டி 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தோடு, அணித் தலைவர் நிப்புன் தனன்ஞயவும் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களுடன் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

ஒருநாள் தரவரிசையில் அதியுயர் முன்னேற்றம் கண்ட அகில தனன்ஜய

இலங்கை இளையோர் அணி இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரை 1-1 என சமநிலை செய்துள்ளதுடன், இந்த இளையோர் ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியை செவ்வாய்க்கிழமை (6)  எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி – 114/3 (26.4) – தன்ஷித் ஹசன் 38, தவ்ஹீத் ரித்தோய் 20, லக்ஷான் கமகே 2/14

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி – 161/2 (16.4) – நவோத் பராணவிதான 62, நிப்புன் தனன்ஞய 38*

முடிவு – இலங்கை இளையோர் அணி டக்வத் லூவிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<