பந்துவீச்சாளர்களால் 2014இல் உலக சாதனை படைத்த இலங்கை

129

இலங்கை கிரிக்கெட் அணியின் பொற்காலமாக கருதப்பட்ட 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு 1 இல் காணப்பட்ட இலங்கை அணிக்கும், நெதர்லாந்து அணிக்கும் இடையிலான குழுநிலை போட்டியில், மிகப் பெரிய சாதனை ஒன்றினை இலங்கை அணி செய்திருந்தது.    

ஒரு காலத்தில், கத்துக்குட்டி கிரிக்கெட் அணிகள் இலங்கை அணியுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகினால், இலங்கை கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணிகளை வைத்து சில சாதனைகள் செய்துவிடுவது வழக்கமாக காணப்பட்டிருந்தது. இவ்வாறான சாதனையொன்றே இலங்கை – நெதர்லாந்து அணிகள் இடையிலான T20 போட்டியின் போதும் நடைபெற்றிருந்தது.

மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்

பங்களாதேஷின் சட்டோக்ராம் நகரில் ஆரம்பித்த நெதர்லாந்து – இலங்கை இடையிலான குறித்த போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையில் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பீட்டர் போரன் தலைமயிலான நெதர்லாந்து அணிக்கு வழங்கியது.

தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நல்ல ஆரம்பம் ஒன்றினை அடையும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே இலங்கை பந்துவீச்சாளர்கள் மூலம் அதிர்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது.

போட்டியின் முதல் ஓவரினை வீசிய இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான நுவான் குலசேகர தனது ஓவரின் மூன்றாவது பந்தில் நெதர்லாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஸ்டீபன் மேய்பேர்க்கினை பிடியெடுப்பு மூலம் ஓட்டம் எதுவுமின்றி ஓய்வறை அனுப்பினார். இதன் பின்னர், போட்டியின் அடுத்த ஓவரினை வீசிய அஞ்செலோ மெதிவ்ஸ் நெதர்லாந்தின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் இருவரினை ஓய்வறைக்கு அனுப்பினார். இதில் மைக்கல் ஸ்வார்ட் ஓட்டம் எதனையும் பெறாமல் விக்கெட்காப்பாளர் குமார் சங்கக்காரவிடம் பிடிகொடுத்திருக்க, வெஸ்லி பர்ரெஸி ஒரு ஓட்டத்துடன் மீண்டும் பிடியெடுப்பில் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. இதனால், ஒரு ஓட்டத்திற்கு 3 விக்கெட்டுக்களை இழந்து நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே தடுமாற்றம் காட்டியது.

சனத்தின் அதிரடியோடு T20 உலகக் கிண்ணத்தில் உலக சாதனை படைத்த இலங்கை

இதனையடுத்து போட்டியின் நான்காவது ஓவரில் மீண்டும் அசத்திய அஞ்செலோ மெதிவ்ஸ், நெதர்லாந்து அணியின் நான்காவது விக்கெட்டினை வீழ்த்தினார். நான்காவது விக்கெட்டாக அதன் தலைவர் பீட்டர் பொர்ரன் ஓட்டம் எதனையும் பெறாது LBW முறையில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.

அதனையடுத்து அவ்வணி தமக்கு ஏற்பட்ட சரிவினை சரி செய்ய முயன்ற போதும், 5ஆவது விக்கெட் 25 ஓட்டங்கள் பெற்ற போது ரன்அவுட் முறையில் பறிபோனது. திசர பெரேராவினால் ரன் அவுட் செய்யப்பட்ட பென் கூப்பர் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

நெதர்லாந்து அணி தமது ஐந்தாவது விக்கெட்டினை அடுத்து மிகப் பெரிய அனர்த்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்தது. அவ்வணியின் மத்திய வரிசை வீரர்கள் இலங்கையின் வேகப்புயலான லசித் மாலிங்கவினை எதிர்கொள்ள முடியாமல் தமது விக்கெட்டுக்களை மிக வேகமாக பறிகொடுத்தனர். இதன் பின்னர், மாயஜால சுழல்பந்துவீச்சாளரான அஜந்த மெண்டிஸ் தனது பந்துவீச்சு மூலம் நெதர்லாந்து அணிக்கு மீண்டும் நெருக்கடியினை உருவாக்கினார்.

2012 T20 உலகக் கிண்ணத்தில் களைக்கட்டிய அஜந்த மெண்டிஸின் மாய சுழல்!

இதனால் நெதர்லாந்து அணி தமது இறுதி 5 விக்கெட்டுக்களையும் வெறும் 14 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து, மொத்தமாக 39 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து T20 சர்வதேசப் போட்டிகளில் அப்போது அணியொன்று பதிவு செய்த மிகக் குறைந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இது நெதர்லாந்து அணி அவர்களது கிரிக்கெட் வரலாற்றில் வெளிப்படுத்திய மிகப் பெரிய தர்ம சங்கட துடுப்பாட்டமாகவும் மாறியிருந்தது.

இதேநேரம், நெதர்லாந்தினை 39 ஓட்டங்களுக்குள் மடக்கியதன் மூலம் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாகவும், எதிரணியினை அதிகுறைந்த ஓட்டங்களுக்குள் மடக்கிய அணியாகவும் இலங்கை ஒரு வரலாற்று சாதனையினைப் படைத்தது.

தொடர்ந்து நெதர்லாந்து அணியுடனான போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி, தமது குழுவிலும் முதல் இடம் பெற்று, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண வெற்றியாளராகவும் மகுடம் சூடியது.

மறுமுனையில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி சார்பில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்த காரணமாக இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…