சகலதுறையிலும் பிரகாசித்த ஷெஹான் ஜயசூரிய: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை A

2905
SL A v Eng Lions, 3 One Day Game

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின், இன்றைய மூன்றாவது போட்டியில், பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் தனது முழுத்திறமையினையும் வெளிப்படுத்தியிருந்த ஷெஹான் ஜயசூரிய மற்றும் ஏனைய சக வீரர்களின் ஆட்டத்தோடு, விருந்தினர் அணியினை இலங்கை A அணி நான்கு விக்கெட்டுகளால் வீழ்த்தியுள்ளது.

அத்துடன் இந்த வெற்றியுடன் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரினை இலங்கை A அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.

குருநாகல் வெலகதெர மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியினை தனதாக்கி கொண்ட, கீட்டன் ஜென்னிங்ஸ் தலைமையிலான இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இலங்கை A அணியில், இப்போட்டியில் கடந்த போட்டியில் சதமடித்து சிறப்பாக செயற்பட்டிருந்த தனுஷ்க குணத்திலக்கவிற்கு ஓய்வு வழங்கப்பட்டதோடு, அவரிற்கு பதிலாக சந்துன் வீரக்கொடி அணியில் இணைக்கப்பட்டிருந்தார். அத்துடன், விக்கும் சஞ்சயவிற்கு பதிலாக அசித்த பெர்னாந்து List A போட்டியொன்றில் முதல் முறையாக உள்வாங்கப்பட்டிருந்தார்.

பின்னர், அணித்தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் பென் டக்கெட் என்கிற தமது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுடன் மைதானம் நுழைந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, நல்ல ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருந்தது. அவ்வணியின் முதல் விக்கெட்டாக பென் டக்கெட் 27 பந்துகளிற்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக மொத்தம் 31 ஓட்டங்களுடன், ஷெஹான் ஜயசூரியவினால் வீழ்த்தப்பட்டார்.

அவ்வணியின், இரண்டாவது விக்கெட் முதல் விக்கெட்டினை அடுத்து குறுகிய நேரத்தில் பறிபோய் இருப்பினும், அவ்வணி ஓட்டங்களினை குவிப்பதில் திறம்பட்ட நிலையிலேயே இருந்தது. இத்தருணத்தில், லயன்ஸ் அணி 110 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் போட்டியின் 22ஆவது ஓவரினை வீசிய ஷெஹான் தனது சுழலின் மூலம் அந்த ஓவரின் அடுத்தடுத்த (4,5ஆவது) பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனால், நிலைகுலைந்த இங்கிலாந்து லயன்ஸ் தரப்பினர், அப்போதைய நிலையினை கருத்திற் கொண்ட இலங்கை A அணி, தமது சுழல் வீரர்களை நுட்பமான முறையில் உபயோகித்து, 184 ஓட்டங்களிற்குள் எதிரணியினை மடக்கியது.

40.2 ஓவர்களை மாத்திரமே விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணியில், டேனியல் பெல்-டிரம்மொன்ட் அதிகபட்சமாக 51 ஓட்டங்களினைக் குவித்ததோடு இலங்கை A அணி சார்பாக, ஷெஹான் ஜயசூரிய வெறும் 35 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 185 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெற்றால் வெற்றி என மைதானம் விரைந்த இலங்கை A  அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோரை வெற்றி இலக்கினைப் பெறும் பந்தயத்தில் தவறவிட்டிருந்தது. எனினும், சிறப்பாக ஆடிய ஷெஹான் ஜயசூரிய மற்றும் கித்ருவன் விதானகே ஆகியோரின் ஆட்டத்தினால், 37 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களுடன் இலங்கை A அணி வெற்றி பெற்றது.

இலங்கை A சார்பான அணியின் துடுப்பாட்டத்தில், ஷெஹான் ஜயசூரிய 83 பந்துகளிற்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை விளாசி 83 ஓட்டங்களினை குவித்திருந்தார். மறுமுனையில், கித்ருவன் விதனாகே ஆட்டமிழக்காமல் பெறுமதி மிக்க 44 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சில், ஒல்லி ரெய்னர் மற்றும் லியாம் லிவிங்ஸ்ட்டன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் பங்கிட்டிருந்தனர்.

இத்தொடரின், நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (9) கொழும்பு R. பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி – 184 (40.2) – டேனியல் பெல்-டிரம்மொன்ட் 51(67), பென் டக்கெட் 31(27), கீட்டன் ஜென்னிங்ஸ் 22(33), ஷெஹான் ஜயசூரிய 35/5(10), அமில அபொன்சோ 28/2(8.2), ஜெப்ரி வன்டர்சே 38/2(9)

இலங்கை A அணி – 187/6 (37) – ஷெஹான் ஜயசூரிய 83(83), கித்ருவன் விதானகே 44*(55), குசல் பெரேரா 26(38), லியாம் லிவிங்ஸ்ட்டன் 39/2(9), ஒல்லி ரெய்னர் 51/2(10)

போட்டி முடிவு – இலங்கை A அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி