இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் சாத்தியமில்லை

224
india tour of sri lanka
@Getty Images

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இந்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவது சாத்தியம் இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்திருக்கின்றது.

>> T20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொள்ளாது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா?

இந்த மாத இறுதிப் பகுதியில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், உலகில் உருவாகிய கொரோனா வைரஸ் தாக்கம் இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம் ஒன்றினை உருவாக்கியது. ஆனால், கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவிருக்கும் நாடான இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த காரணத்தினால், இலங்கை – இந்திய அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

இந்த கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் சாத்தியப்பாடு ஒன்று உருவாகி வந்த நிலையிலையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இத் தொடர்கள் நடைபெறுவது சாத்தியம் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றது. 

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தமது சக அங்கத்துவ நாடுகளிடம் இந்திய அணி எதிர்காலத்தில் விளையாடவிருக்கும் கிரிக்கெட் தொடர்களினை நடாத்த முனைப்புடன் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.   

”நிலைமைகள் எவ்வாறு இருந்த போதும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தமது அங்கத்துவர்களுடன் இணைந்து எதிர்கால கிரிக்கெட் போட்டிகள் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைய போட்டிகளை நடாத்துவதற்கு முனைப்புடன் காணப்படுகின்றது. இதோடு, (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) கிரிக்கெட் போட்டிகளை மீள நடாத்த இந்திய அரசாங்கத்தினதும், சுகாதார அதிகாரசபைகளினதும் பரிந்துரைகளும் தேவையாக இருக்கின்றது.” என இந்திய கிரிக்கெட் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேநேரம், இந்திய அணியுடனான போட்டிகள் சாத்தியமில்லாத நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி மூன்றாவது தடவையாக கொரோனா வைரஸினால் வெளிநாட்டு அணி ஒன்றுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பங்களாதேஷ் அணியுடன் ஜூலை மாத நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே, கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர் விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<