திரித்துவக் கல்லூரியுடனான இறுதிப் போட்டிக்கு புனித ஜோசப் கல்லூரி தகுதி

126

புனித ஜோசப் கல்லூரியின் உப தலைவர் நிபுன் சுமனசிங்கவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு மஹாநாம கல்லூரியை வீழ்த்திய கொழும்பு புனித ஜோசப் கல்லூரி 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று (டிவிஷன் 1) தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்திலேயே புனித ஜோசப் கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்பு, புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று (08) மஹாநாம கல்லூரி முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

மஹாநாம – புனித ஜோசப் கல்லூரிகளின் அரையிறுதி போட்டிக்கு காலநிலை குறுக்கீடு

கொழும்பு மஹாநாம கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு ….

முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் மஹாநாம கல்லூரி தனது எஞ்சிய விக்கெட்டுகளை குறுகிய ஓட்டங்களுக்கு இழந்தது. இதனால் அந்த அணி 60.4 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மஹாநாம அணி சார்பில் பவன்த வீரசிங்க முதல் நாளில் பெற்ற 39 ஓட்டங்களுமே அதிகமாகும். புனித ஜோசப் கல்லூரிக்காக சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் தலைவர் ஜெஹான் டானியல் 55 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தவிர துமித் வெல்லகம மற்றும் நிபுன் சுமனசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் நாள் முடிவின்போது போனஸ் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்ற புனித ஜோசப் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் பந்துவீச்சில் சோபித்த உப தலைவர் நிபுன் சுமனசிங்க துடுப்பாட்டத்திலும் கைகொடுத்தார். அவர் பெற்ற 69 ஓட்டங்களும் புனித ஜோசப் கல்லூரி ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவியது. தினேஷ் ஜயகொடி 40 ஓட்டங்களை பெற்றார்.

கடைசி நேரத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற புனித ஜோசப் கல்லூரி போராடியபோது லக்ஷான் கமகே ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களை பெற்றார்.

தசம புள்ளிகளால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த திரித்துவக் கல்லூரி

இலங்கை இளம் தேசிய அணி வீரர் ஹசித போயகொட மற்றும் புபுது பண்டாரவின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் …..

இதன்மூலம் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் முடிவடையும்போது புனித ஜோசப் கல்லூரி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 12 ஓட்டங்களால் முன்னிலை பெற்று அதற்கான புள்ளிகளை வென்றது.

இதனால் போட்டி சமநிலையில் முடிந்தபோதும் புனித ஜோசப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்படி அந்த அணி திரித்துவ கல்லூரியுடனான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 172 (60.4) – பவந்த வீரசிங்க 39, சொனால் கமகே 39, தினுக்க ரூபசிங்க 28, ஜெஹான் டானியல் 4/55, நிபுன் சுமனசிங்க 3/21, துனித் வல்லகே 3/27

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 184/8 (50) – நிபுன் சுமனசிங்க 69, தினேஷ் ஜயகொடி 40, லக்ஷான் கமகே 23*, சொனால் கமகே 2/38, ஹஷான் சன்தீப 2/47

முடிவு போட்டி சமநிலையில் முடிந்தது. முதல் இன்னிங்ஸ் வெற்றியினால் புனித ஜோசப் கல்லூரி இருதிப் போட்டிக்கு தெரிவு