T20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய சொஹைப் மலிக்!

137

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சொஹைப் மலிக்   T20 போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் மற்றும் ஆசிய வீரர்  என்ற  பெருமையை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான சொஹைப் மலிக், தற்போது அங்கு நடைபெற்று வரும் உள்ளூர் தேசிய T20 கிண்ணத் தொடரில், கைபர் பக்துன்க்வா அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார்.

வேறு திகதியில் லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

இந்தநிலையில், இன்றைய தினம் கைபர் பக்துன்க்வா அணி, பலோசிஸ்டன் அணியை எதிர்கொண்டு விளையாடியிருந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கைபர் பக்துன்க்வா அணி 154 ஓட்டங்களை குவித்திருந்தது. இந்த அணி சார்பாக களமிறங்கிய சொஹைப் மலிக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சொஹைப் மலிக் தான் எதிர்கொண்ட  44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை குவித்து கைபர் பக்துன்க்வா அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு உதவியிருந்தார்.

இந்த ஓட்ட எண்ணிக்கையை சொஹைப் மலிக் பெற்றதன் ஊடாக, ஒட்டுமொத்த T20 போட்டிகளிலும் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் பாகிஸ்தான் மற்றும் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். 

அதேநேரம், சர்வதேச ரீதியில் T20 போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரராகவும், சொஹைப் மலிக் சாதனைப்பட்டியலில் இணைந்துள்ளார். சொஹைப் மலிக் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களான க்ரிஸ் கெயில் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

சொஹைப் மலிக் 395 போட்டிகளில் 37.41 என்ற சராசரியில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ள நிலையில், க்ரிஸ் கெயில் 404 போட்டிகளில் 38.20 சராசரியில் 13296 ஓட்டங்களையும், கீரன் பொல்லார்ட் 518 போட்டிகளில் 31.51 என்ற சராசரியில் 10370 ஓட்டங்களையும் குவித்துள்ளனர்.

Video: சங்கக்கார சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக மாற காரணம் என்ன?

இதேவேளை, சொஹைப் மலிக், T20I போட்டிகளிலும், அதிகூடிய ஓட்டங்களை பெற்ற பாகிஸ்தான் வீரராக உள்ளார். இவர், பாகிஸ்தான் அணிக்காக 115 போட்டிகளில் வியைளாடி 31.39 என்ற ஓட்ட சராசரியில் 2323 ஓட்டங்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக மொஹமட் ஹபீஸ் இரண்டாவது இடத்தையும், உமர் அக்மல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<