பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஷோன் டைட்

3

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோன் டைட் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணி அண்மையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியது.

இதனையடுத்து பங்களாதேஷ் அணியானது இம்மாதம் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின்  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த T20i தொடரானது எதிர்வரும் மே 25ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

இத்தொடர்களை நிறைவு செய்தவுடன் பங்களாதேஷ் அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் பங்களாதேஷ் அணியானது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இத்தொடர்களுக்கு முன்னதாக பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோன் டைட் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (13) அறிவித்துள்ளது.

முன்னதாக நியூசிலாந்தின் ஆண்ட்ரூ ஆடம்ஸ் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கி தற்போது ஷோன் டைட்டை புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஷோன் டைட் எதிர்வரும் 2027ஆம் நவம்பர் மாதம் வரை பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் ஆசியக் கிண்ணம், ஐசிசி T20 உலகக் கிண்ணம் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய தொடர்கள் நடைபெறவுள்ளது. இதற்கு மத்தியில் ஷோட் டைட் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஷோன் டைட் கருத்து தெரிவிக்கையில், ‘பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இணைவதற்கு இது ஒரு நல்ல நேரம், நீங்கள் விரும்பினால் இது ஒரு புதிய சகாப்தமாக உருவாகும். மேலும் சமீபத்தில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து பல முறை பேசப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச கிரிக்கெட் அணியாகும். திறமை பலனைத் தரும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் வேகப்பந்து வீச்சிலும், அணிக்கு அதிக வெற்றிகளைப் பெறுவதில் தான் என்னுடைய கவனம் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்காக 2005 முதல் 2016ஆம் ஆண்டு வரை விளையாடிவுள்ள ஷோன் டைட் 3 டெஸ்ட், 35 ஒருநாள் மற்றும் 21 T20i போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது அதிவேக பந்துவீச்சுக்கு பேயர்போன இவர் 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் அங்கம் வகித்துள்ளார். மேற்கொண்டு அவர் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளிலும் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்;ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<