அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக டெல்லி அணியில் புதுமுக வீரர்!

Indian Premier League 2021

100
கிரிக்கெட்

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக, புதுமுக சகலதுறை வீரர் சேம்ஸ் முலானி இணைக்கப்பட்டுள்ளார்.

அக்ஷர் பட்டேல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்றிலிருந்து அவர் குணமடைந்து, அணிக்கு திரும்பும் வரையில் சேம்ஸ் முலானி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> டெல்லி கெபிடல்ஸ் வீரர் அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா தொற்று

ஐ.பி.எல். வீரர்கள் விதிமுறை 6.1 இன் படி, ஐ.பி.எல். தொடரில் வீரர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகினால், அவர் மீண்டும் அணியின் உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் வரை, மாற்று வீரர்களை அணிகள் தெரிவுசெய்ய முடியும். அந்தவகையில், சேம்ஸ் முலானி டெல்லி அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அக்ஷர் பட்டேல் அணிக்கு திரும்பும் போது, சேம்ஸ் முலானி குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், இந்த பருவகாலத்தில் ஏனைய அணிகளில் விளையாட முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக, கர்னாடகாவின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் அனிருத்தா ஜோசியையும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இணைத்துள்ளது. இவர், தொடர் நிறைவடையும் வரை டெல்லி கெப்பிட்டல்ஸ் குழாத்துடன் இணைந்திருப்பார்.

சேம்ஸ் முலானி, அக்ஷர் பட்டேல் போன்று, இடதுகை சுழல் பந்துவீச்சாளராகவும், இடதுகை துடுப்பாட்ட வீரராகவும் செயற்படக்கூடிய வீரர். இவர், மும்பை அணிக்காக முதற்தர போட்டிகளில் விளையாடியிருந்தாலும், முதன்முறையாக ஐ.பி.எல். தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33 வயதான அனிருத்தா ஜோசி, கடந்த பருவகாலங்களில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். தற்போது மூன்றாவது அணியாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<