மாலிங்கவின் சாதனையை முறியடித்தார் சகிப் அல் ஹசன்

ICC T20 World Cup – 2021

101
Getty Image
 

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின் சாதனையை பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் முறியடித்துள்ளார்.

அத்துடன், T20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7ஆவது பருவம் நேற்று (17) ஓமானில் ஆரம்பமாகியது. இதில் முதல் சுற்றின் B குழுவுக்கான இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஒட்டங்களால் ஸ்கொட்லாந்து அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான சகிப் அல் ஹசன் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் T20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற லசித் மாலிங்கவின் 107 விக்கெட் சாதனையை சகிப் அல் ஹசன் முறியடித்தார்.

இதுவரை மொத்தம் 89 T20 போட்டிகளில் விளையாடி உள்ள சகிப் அல் ஹசன், மொத்தம் 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். மாலிங்க 107 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த சாதனைப் பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 3ஆவது இடத்திலும் (99 விக்கெட்), பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி 4ஆவது இடத்திலும் (98 விக்கெட்), ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 5ஆவது இடத்திலும் (95 விக்கெட்) உள்ளனர்.

மேலும், T20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000 இற்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை சகிப் அல் ஹசன் பெற்றுக்கொண்டார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<